எழுத்தாளர் ஷோபாடே கிண்டல் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் எடையை குறைக்க சிகிச்சை தொடங்கியது


எழுத்தாளர் ஷோபாடே கிண்டல் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் எடையை குறைக்க சிகிச்சை தொடங்கியது
x
தினத்தந்தி 1 March 2017 3:00 AM IST (Updated: 1 March 2017 5:06 AM IST)
t-max-icont-min-icon

எழுத்தாளர் ஷோபாடே கிண்டல் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் எடையை குறைக்க சிகிச்சை தொடங்கியது.

மும்பை,

எழுத்தாளர் ஷோபாடே கிண்டல் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் எடையை குறைக்க சிகிச்சை தொடங்கியது.

போலீஸ் இன்ஸ்பெக்டர்

மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நடந்த அன்று வெளிமாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த பணியில் இருந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத்ராம் ஜோகாவத் உடல் பருமனுடன் காணப்பட்டார்.

அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் பெண் எழுத்தாளர் ஷோபாடே வாக்களிக்க வந்திருந்த போது, இன்ஸ்பெக்டர் தவுலத்ராம் ஜோகாவத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.

மேலும் பணியில் இருந்த அவரை தனது செல்போனில் படம் பிடித்து அந்த படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து, அவரது உடல் பருமனை சுட்டி காட்டி மும்பையில் கனத்த போலீஸ் பாதுகாப்பு என குறிப்பிட்டு இருந்தார். அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இந்த நிலையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத்ராம் ஜோகாவத்தின் உடல் பருமனை குறைப்பதற்கு இலவசமாக சிகிச்சை அளிக்க மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று முன் வந்தது. இதையடுத்து மும்பை வந்து இன்ஸ்பெக்டர் தவுலத்ராம் ஜோகாவத் சிகிச்சைக்காக அந்த ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்.

அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்கான சிகிச்சை தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தவுலத்ராம் ஜோகாவத் கூறுகையில் ‘‘நான் போலீஸ் பணியில் சேரும் போது எனது எடை 55 கிலோ தான்.

ஆனால் பாதுகாப்பு பணி காரணமாக ஏற்பட்ட அலைச்சலினால் எனக்கு சாப்பாடு சரியில்லாமல் போனது. குறிப்பிட்ட நேரத்தில் என்னால் உணவு சாப்பிட முடியாமல் ஆனது. இதுவே எனது உடல் பருமனுக்கு காரணம். எழுத்தாளர் ஷோபாடேயின் விமர்சனத்தால் தான் இந்த சிகிச்சை கிடைத்து உள்ளது. எனவே எழுத்தாளர் ஷோபாடேவிற்கும், இதற்கு முழு உதவி செய்த மும்பை போலீஸ், தனியார் மருத்துவமனைக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

இன்ஸ்பெக்டர் தவுலத்ராம் ஜோகாவத் சேர்க்கப்பட்டுள்ள அதே ஆஸ்பத்திரியில் தான் 500 கிலோ எடை கொண்ட எகிப்து நாட்டு பெண்ணும் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story