கர்நாடகத்தில் காங்கிரஸ் இல்லாத நிலையை எடியூரப்பா உருவாக்குவார் ஈசுவரப்பா பேட்டி
கர்நாடகத்தில் காங்கிரஸ் இல்லாத நிலையை எடியூரப்பா உருவாக்கி காட்டுவார் என்று ஈசுவரப்பா கூறியுள்ளார்.
சிவமொக்கா,
கர்நாடகத்தில் காங்கிரஸ் இல்லாத நிலையை எடியூரப்பா உருவாக்கி காட்டுவார் என்று ஈசுவரப்பா கூறியுள்ளார்.
ஈசுவரப்பா பேட்டிசிவமொக்காவில் நேற்று நடந்த மேயர் தேர்தலில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வும், மேல்–சபை எதிர்க்கட்சி தலைவருமான ஈசுவரப்பா வாக்களித்தார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
சிவமொக்கா மாநகராட்சியை கடந்த 3 ஆண்டுகளாக காங்கிரசும், ஜனதாதளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து கைப்பற்றி வந்தன. ஆனால் மேயர் பதவியை விட்டு கொடுக்க காங்கிரஸ் மறுத்ததால் ஜனதாதளம்(எஸ்) கட்சி காங்கிரசுடனான கூட்டணியை முறித்தது. இதனை தொடர்ந்து இந்த முறை ஜனதாதளம்(எஸ்) கட்சியும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்து மேயர் தேர்தலை சந்தித்தது. தற்போது ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த ஏழுமலை மேயராகவும், பா.ஜனதா கட்சியை சேர்ந்த ரூபா லட்சுமணன் துணை மேயராகவும் வெற்றி பெற்று உள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
எடியூரப்பா மாற்றி காட்டுவார்சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஊழல் புகார் குறித்து பேசாமல், பா.ஜனதா கட்சியின் முன்னால் மந்திரிகள் செய்த ஊழல் வழக்குகளை தூசித்தட்டி மிரட்ட நினைக்கிறது. இதற்கெல்லாம் பா.ஜனதா கட்சியை சேர்ந்த தலைவர்கள் பயப்பட போவதில்லை. ஏனெனில் ஊழல் இல்லாத அரசை மோடி, மத்தியில் நடத்தி வருகிறார். அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர்.
அதேபோல் மாநில பா.ஜனதா தலைவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துள்ளன. எப்படி மத்தியில் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை மோடி உருவாக்கி வருகிறாரோ, அதேப்போல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று கர்நாடகத்தை காங்கிரஸ் இல்லாத மாநிலமாக எடியூரப்பா உருவாக்கி காட்டுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.