சிவமொக்கா மாநகராட்சி மேயராக தமிழர் தேர்வு ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்
சிவமொக்கா மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் புதிய மேயராக ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்தவரும், தமிழருமான ஏழுமலை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிவமொக்கா,
சிவமொக்கா மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் புதிய மேயராக ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்தவரும், தமிழருமான ஏழுமலை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிவமொக்கா மாநகராட்சிசிவமொக்கா மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு கடந்த 3 முறையும் ஆளும் காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்தன.
மேயராக காங்கிரசைச் சேர்ந்தவர்களும், துணை மேயராக ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்தவர்களும் இருந்து வந்தனர். இந்த நிலையில் கூட்டணி ஒப்பந்தப்படி இந்த முறை மேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் விட்டுக் கொடுக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் மேயர் பதவியை விட்டுக் கொடுக்க முன்வரவில்லை. இதனால் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி முறிந்தது.
புதிய கூட்டணிஇதையடுத்து மேயர் தேர்தலை பா.ஜனதாவும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து சந்தித்தன. இந்த புதிய கூட்டணியின் ஒப்பந்தப்படி மேயர் பதவி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கும், துணை மேயர் மற்றும் 3 நிலைக்குழு தலைவர்களின் பதவிகள் பா.ஜனதாவுக்கும் என நிர்ணயிக்கப்பட்டது.
மேயர் பதவி இடஒதுக்கீட்டின் படி ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த தமிழரான ஏழுமலை என்கிற கேபிள் பாபுவும், காங்கிரசைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரும் மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். துணை மேயர் பதவிக்கு போட்டியிட பா.ஜனதாவைச் சேர்ந்த கவுன்சிலர் ரூபா லட்சுமணன் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
மேயராக தமிழர் தேர்வுமாநகராட்சி தேர்தல் அதிகாரியாக பெங்களூரு மண்டல அதிகாரி ஜெயந்தி செயல்பட்டார். அவர் அறிவித்தபடி நேற்று காலை 11 மணிக்கு தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள், பிற கட்சிகள் மற்றும் சுயேட்சையாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களும் வாக்களித்தனர்.
தேர்தல் முடிந்த பின்னர் தேர்தல் அதிகாரி ஜெயந்தி வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவித்தார். அதன்படி சிவமொக்கா மாநகராட்சி புதிய மேயராக ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்தவரும், தமிழருமான ஏழுமலை தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயராக ரூபா லட்சுமணன் போட்டியின்றி வெற்றிபெற்றார். தேர்தலில் வெற்றிபெற்ற புதிய மேயர் மற்றும் துணை மேயருக்கு கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மக்களுக்கான உழைப்பேன்இதையடுத்து புதிய மேயர் ஏழுமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
என்னை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க உதவிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிவமொக்கா நகரில் உள்ள 35 வார்டுகளிலும் கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன்.
அனைத்து பகுதிகளிலும் சமுதாயக்கூடம், சமுதாயக்கூடம், பொதுக்கழிப்பிடம் ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்துள்ளவர்களை கண்டறிந்து, உடனடியாக வரியை வசூல் செய்வேன். அப்படி செய்தால்தான் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியும். கட்சி பாகுபாடு பார்க்காமல் மக்களுக்காக உழைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
2–வது முறையாக...சிவமொக்கா மாநகராட்சி வரலாற்றில் தமிழர் ஒருவர் மேயராக இருப்பது தற்போது 2–வது முறையாகும். இதற்கு முன்னர் 1978–ம் ஆண்டு சிவமொக்கா மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், தமிழருமான முருகேஷ் மேயராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநகராட்சி தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.