பெண் விவகாரத்தில் நண்பரை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை கோலார் செசன்சு கோர்ட்டு தீர்ப்பு


பெண் விவகாரத்தில் நண்பரை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை கோலார் செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 1 March 2017 1:30 AM IST (Updated: 1 March 2017 5:09 AM IST)
t-max-icont-min-icon

பெண் விவகாரத்தில் நண்பரை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோலார் செசன்சு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

கோலார் தங்கவயல்,

பெண் விவகாரத்தில் நண்பரை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோலார் செசன்சு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

தகராறு

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா கீழகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 38). பங்காருபேட்டை தாலுகா செல்லிகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நந்தீஷ் என்கிற நந்தா (25). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். நந்தா ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

நந்தாவும் அந்தப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில், ஆயத்த ஆடை தொழிற்சாலையில் இருந்து நந்தா திடீரென்று நீக்கப்பட்டார். அதன்பின்னர், அந்த பெண் நந்தாவுடன் பழகுவதை நிறுத்திவிட்டு, பாபுவுடன் பழகி வந்ததாக தெரிகிறது. இதனால் அந்த பெண் விவகாரத்தில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கொலை

இதனால் நந்தா, பாபுவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த 2005–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15–ந்தேதி பாபுவும், நந்தாவும் முல்பாகலில் ஒதுக்குப்புறமாக பகுதியில் வைத்து மது அருந்தினர். அப்போது நந்தா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாபுவை சரமாரியாக குத்தினார்.

இதில், பாபு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முல்பாகல் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தாவை கைது செய்தனர். விசாரணையில், பெண் விவகாரத்தில் நந்தா, தனது நண்பர் பாபுவை கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் நந்தா மீது கோலார் செசன்சு கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை கோலார் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் நீதிபதி என்.வி.விஜய் தீர்ப்பு வழங்கினார். அதில் நந்தா மீதான குற்றம் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அரசு சார்பில் வக்கீல் ரங்கசாமி ஆஜராகி வாதாடினார்.


Next Story