பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுடன் செங்கோட்டையன் உள்பட 4 அமைச்சர்கள் சந்திப்பு
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை செங்கோட்டையன் உள்பட 4 அமைச்சர்கள் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.
பெங்களூரு,
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை செங்கோட்டையன் உள்பட 4 அமைச்சர்கள் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.
திரும்பி சென்றனர்சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலா மற்றும் இளவரசியை அவர்களது உறவினர்கள் நேரில் பார்த்து வந்தனர். அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சசிகலாவை சந்தித்து பேசிவிட்டு சென்றார்.
தமிழகத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட சில அமைச்சர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க பெங்களூரு வந்தனர். ஆனால் அவர்கள் சிறை நிர்வாகத்திடம் முன் அனுமதி பெறாததால் சசிகலாவை சந்திக்க முடியாமல் திரும்பி சென்றனர்.
அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்தனர்இந்த நிலையில் முதல் முறையாக சிறையில் உள்ள சசிகலாவை தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன்(பள்ளி கல்வி), திண்டுக்கல் சீனிவாசன்(வனம்), செல்லூர் ராஜூ(கூட்டுறவு), காமராஜ்(உணவு மற்றும் பொது விநியோகம்) ஆகிய 4 பேரும் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்களுடன் கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் வா.புகழேந்தியும் உடன் இருந்தார்.
மதியம் 1.25 மணிக்கு சிறைக்குள் சென்ற அவர்கள் 2.35 மணிக்கு சிறையை விட்டு வெளியே வந்தனர். 70 நிமிடங்கள் அவர்கள் சிறைக்குள் இருந்தனர். அமைச்சர்கள் 4 பேரும் சசிகலாவுக்கு தனித்தனியாக பழங்களை வழங்கி நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது. 4 அமைச்சர்களும் ஒரே காரில் சிறைக்கு வந்தனர். அவர்கள் வந்த கார் சிறை நுழைவு வாயில் வரை செல்ல அனுமதிக்கப்பட்டது.
சாதாரண நபர்களை போல்...அவர்கள் சாதாரண காரில் தான் அங்கு வந்தனர். அவர்கள் வந்த காரில் அரசு பதவிகளில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கான சைரன் விளக்கு இல்லை. போலீஸ் பாதுகாப்பும் இல்லாமல் சாதாரண நபர்களை போல் அங்கு வந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த அமைச்சர்களை பத்திரிகையாளர்கள் பேட்டி காண முயற்சி செய்தனர்.
ஆனால் அவர்களின் கார் நிற்காமல் சென்றுவிட்டது. சிறை வளாகத்தில் போலீஸ் கெடுபிடி எதுவும் இல்லை. சுமார் 50 போலீசார் சிறை அருகே மெயின் ரோட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பரப்பன அக்ரஹாரா பகுதியில் மெயின் ரோட்டில் இருந்து சிறைக்கு செல்லும் பகுதியில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் போலீசார் அனைவரையும் உள்ளே செல்லவும், வெளியே வரவும் அனுமதிக்கிறார்கள்.