காங்கிரஸ் பிரமுகரின் கடையில் பணம்– பொருட்கள் திருட்டு கொள்ளையனின் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது


காங்கிரஸ் பிரமுகரின் கடையில் பணம்– பொருட்கள் திருட்டு கொள்ளையனின் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது
x
தினத்தந்தி 1 March 2017 4:30 AM IST (Updated: 1 March 2017 5:11 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டாரில் காங்கிரஸ் பிரமுகரின் பேக்கரி கடையில் பணம்–பொருட்களை திருடிய கொள்ளையனின் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது. அதை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவட்டார்,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

காங்கிரஸ் பிரமுகர்

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பொடிசாரவிளையை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 46). இவர் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளராக உள்ளார். திருவட்டார் பஸ் நிலையம் அருகே பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

வழக்கம்போல் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலையில் கடையை திறக்க சென்ற போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, கடையில் இருந்த ரூ.13 ஆயிரத்து 450 ரொக்கபணம் மற்றும் கேக், குளிர்பானம் உள்பட ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தன.

இரவில் யாரோ மர்ம நபர் கதவை உடைத்து உள்ளே புகுந்து பணம், பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.

கேமராவில்             கொள்ளையன் உருவம்

இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து பேக்கரியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி பார்வையிட்டனர்.

அப்போது, பேக்கரியின் உள் பகுதியில் ஒரு மர்ம நபர் திருட்டில் ஈடுபடும் காட்சி தெளிவாக பதிவாகி இருந்தது. மின்விளக்கை போடாமல் தனது செல்போனில் உள்ள லைட் வெளிச்சத்தில் அந்த மர்ம நபர் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

இந்த காட்சி மூலம் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story