கள்ளக்குறிச்சி அருகே கார் மீது லாரி மோதல்; கல்லூரி மாணவர் பலி தந்தை–மகன் உள்பட 3 பேர் படுகாயம்
கள்ளக்குறிச்சி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் இறந்தார்.
கள்ளக்குறிச்சி,
கல்லூரி மாணவர்கள்ளக்குறிச்சி அருகே உள்ள பொன்பரப்பட்டை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் கோபிகிருஷ்ணன்(வயது 21). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் 4–ம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் கள்ளக்குறிச்சி அருகே புத்தந்தூரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கோகுலகிருஷ்ணன்(21) என்பவரும்
இதேபோல் கள்ளக்குறிச்சி அருகே பரமநத்தத்தை சேர்ந்த அன்பழகன் மகன் அசோக்(22), புத்தந்தூரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கோகுலகிருஷ்ணன்(21) ஆகியோரும் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் விடுமுறைக்காக தங்களுடைய வீட்டுக்கு வந்திருந்தனர். பின்னர் விடுமுறையை கழித்துவிட்டு கல்லூரிக்கு புறப்பட முடிவு செய்தனர்.
அதன்படி அசோக்குக்கு சொந்தமான காரில் சென்னைக்கு செல்வதற்காக கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தனர். இவர்களுடன் அசோக்கின் அப்பா அன்பழகனும் பயணம் செய்தார். காரை அசோக் ஓட்டினார். இந்த கார் கள்ளக்குறிச்சி–சங்கராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கோபிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அசோக், அன்பழகன், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதற்கிடையே லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
போலீசார் விசாரணைஇதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த அசோக் உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் கோபிகிருஷ்ணன் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து கோபிகிருஷ்ணனின் அப்பா சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.