சங்கராபுரம் அருகே பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சங்கராபுரம் அருகே பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது.
சங்கராபுரம்,
பெரியநாயகி அம்மன் கோவில்சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மயானக்கொள்ளை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 24–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சக்தி கரகம் அழைத்தல் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வீதியுலாபின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெரியநாயகி அம்மன் ஊர்வலமாக மணிநதிக்கரையில் உள்ள மயானத்தை சென்றடைந்தனர். அப்போது பக்தர்கள் சிலர், சிவன், அம்மன், காளி உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர்வலமாக மயானத்திற்கு சென்றனர். இதையடுத்து அங்கு மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் சிலர் அருள் வந்து ஆடியபடி, ஆடு, கோழி உள்ளிட்டவைகளை வாயில் கடித்து, ரத்தம் குடித்தனர். இதையடுத்து அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் சங்கராபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.