மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ரூ.100 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்வாராக்கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும், வங்கித்துறையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்களை கைவிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தில் கூடுதல் நேரம் பணியாற்றிய ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், வங்கி ஊழியர்களுக்கான அடுத்தகட்ட சம்பள விகிதத்தை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் என 150–க்கும் மேற்பட்ட வங்கிகளில் பணியாற்றும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சுமார் 1,500–க்கும் மேற்பட்டோர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பண பரிவர்த்தனை பாதிப்புஇதனால் பெரும்பாலான வங்கிகள், ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக வங்கி சேவை முற்றிலும் முடங்கியது. மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.100 கோடி அளவிற்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ரூ.5 கோடிக்கு மேல் காசோலை பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது. அதேபோல் ஏ.டி.எம். சேவையும் முடங்கியது என வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம்விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி முன்பு வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க முன்னாள் மாநில தலைவர் முருகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர் சங்கத்தினர் சீனுவாசன், நீலகண்டன், சொக்கநாதன், நாராயணசாமி, இளங்கோவன், மணிராதா, தியாகராஜன், சேகர், ஜெயச்சந்திரன், செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.