நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை மூட கோரி பா.ம.க.வினர் போராட்டம்
நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை மூட கோரி பா.ம.க.வினர் போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி,
தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, பா.ம.க. சார்பில் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலையில் கோவில்பட்டி– எட்டயபுரம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் பா.ம.க.வினர் டிஜிட்டல் பேனரை ஒட்ட சென்றனர். மாவட்ட அமைப்பு செயலாளர் காளிராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் முத்துகுமார், இளைஞர் அணி செயலாளர் மகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். உடனே கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று, பா.ம.க.வினரை வழிமறித்தனர். பின்னர் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, பா.ம.க.வினர் சிறிதுநேரம் ஆர்ப்பாட்டம் நடத்தி, கோஷங்களை எழுப்பினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.