தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம்
கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியது. கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
தவக்காலம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஏசுவின் பாடுகளை நினைவு கூறும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தவக்காலம் நேற்று தொடங்கியது. தொடக்கநாளான நேற்றைய தினம் சாம்பல் புதனாக கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி சின்னக்கோவிலில் நேற்று காலை பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
சாம்பல் புதன்சாம்பல் புதனையொட்டி கடந்த ஆண்டு குருத்தோலை பண்டிகைக்கு பிறகு மக்கள் வாங்கி சென்ற குருத்தோலைகள் ஆலயத்தில் ஒப்படைக்கப்பட்டு, அந்த ஓலைகள் எரிக்கப்பட்டன. அதன் சாம்பலை கொண்டு பங்கு மக்கள் நெற்றியில் பிஷப் இவோன்அம்புரோஸ், சிலுவை வரைந்து ஆசி கூறினார்.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி பங்கு தந்தை பிராங்கிளின் பர்ணான்டோ தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
இதே போன்று பனிமயமாதா ஆலயம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 40 நாட்கள் தவக்காலம் முடிவில், அடுத்த மாதம் 14–ந் தேதி புனிதவெள்ளியும், 16–ந் தேதி ஈஸ்டர் பண்டிகையும் நடக்கிறது.