வாகன விபத்து ஆவணங்கள் ஆன்லைனில் பதிவேற்றம்
வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் பயன்பெறும் வகையில் வழக்கு விவரங்கள், ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் திட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தொடங்கி வைத்தார்.
வேலூர்,
வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் பயன்பெறும் வகையில் வழக்கு விவரங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் திட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தொடங்கி வைத்தார்.
ஆன்லைனில் பதிவேற்றம்போலீஸ் நிலையங்களில் போடப்படும் எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது. அதேபோன்று தற்போது வாகன விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் உரிய நிவாரணம் பெறுவதற்கு வசதியாக விபத்து வழக்கு விவரங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் வாகன விபத்து வழக்கு ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் திட்டத்தை பாகாயம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:–
விரைந்து நிவாரணம் பெறவிபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கேட்டு விண்ணப்பிக்கும்போது அதற்கான ஆவணங்களை இணைக்க வேண்டும். இதற்காக தற்போது வரை அவர்கள் போலீஸ் நிலையங்களுக்கு அலையவேண்டும்.
இதை தவிர்க்கும் வகையில் வழக்கிற்கு தேவையான 13 வகையான ஆவணங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். இதை பாகிக்கப்பட்டவர்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளளாம். விபத்து நடந்து 60 முதல் 90 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்யப்பட்டு விடும். இதனை வழக்கில் தொடர்புடைய யார்வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதன் மூலம் போலீஸ் நிலையங்களுக்கு சென்று காத்திருக்க வேண்டியதில்லை.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.
பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வுமேலும் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்ட செல்பவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குழு அமைக்கப்பட்டு, செம்மரம் வெட்ட செல்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து மலைகிராமங்களில் பொதுமக்களிடத்தில் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தற்போது வேலூர் மாவட்டத்தில் இருந்து செம்மரம் வெட்ட செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரசாத் உடனிருந்தார்.