ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் இல்லை கியாஸ் குழாய் பதிக்கவே நிலங்களில் குறியீடு
ராணிப்பேட்டை பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும், கியாஸ் குழாய்பதிக்கவே குறியீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
வேலூர்,
ராணிப்பேட்டை பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும், கியாஸ் குழாய்பதிக்கவே குறியீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டம்?
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் உள்ள விளைநிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து அங்கு விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட் பகுதி விவசாயிகளிடத்திலும் இந்த ஹைட்ரோ கார்பன் பீதி ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் எடப்பாளையம், லாலாபேட்டை, முகுந்தராயபுரம், கத்தாரிகுப்பம், கிருஷ்ணாவரம், குமணந்தாங்கல், கொண்டகுப்பம், பள்ளேரி, வசூர், கோடியூர் உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் குறிப்பிட்ட எண்ணெய் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட சிமெண்டு கற்கள் நடப்பட்டிருந்தன.
விவசாய நிலங்கள் மட்டுமின்றி ஏரிகள், கால்வாய்கள், குளங்கள், நீர்வரத்து கால்வாய்கள் ஆகியவற்றிலும் இந்த கற்கள் நடப்பட்டுள்ளது. சாலை ஓரங்களில் உள்ள மின்கம்பங்கள், மரங்கள், டிரான்ஸ்பார்மர்களிலும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது.
இதனால் ராணிப்பேட்டை பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் செயல்படுத்த இருப்பதாக விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் ராமனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
அச்சமடைய வேண்டாம்ராணிப்பேட்டை பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை, சென்னையில் உள்ள பெட்ரோல் நிறுவனம் ஒன்று எண்ணூர் மற்றும் சித்தூர் பகுதிகளுக்கு குழாய் மூலம் கியாஸ் கொண்டுசெல்லும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த கியாஸ் குழாய் ராணிப்பேட்டை சிப்காட்டில் இயங்கிவரும் 2 தொழிற்சாலைகளுக்கும் கொண்டுவரப்பட உள்ளது.
இதற்காக 1½ மீட்டர் ஆழத்தில் பள்ளம் தோண்டி கியாஸ் குழாய்கள் பதிக்கப்படும். குழாய்கள் பதித்த இடத்திற்குமேல் விவசாயம் செய்யலாம். இதனால் எந்த பாதிப்பும் இருக்காது. எனவே விவசாயிகள் அச்சம் அடையதேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.