நாளை நடைபெற இருந்த மறியல் போராட்டம் வாபஸ் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ. தகவல்
ஆறுமுகநேரியில் பொதுமக்களுடன் இணைந்து நாளை (வெள்ளிக்கிழமை) சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி, ஆறுமுகநேரியில் பொதுமக்களுடன் இணைந்து நாளை (வெள்ளிக்கிழமை) சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார். இதையடுத்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடந்தது.
உதவி கலெக்டர் தியாகராஜன் தலைமை தாங்கினார். அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துணை போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன், தாசில்தார் செந்தூர்ராஜன், நகர பஞ்சாயத்து நிர்வாக உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், காயல்பட்டினம் நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) அறிவுசெல்வம், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் குற்றாலிங்கம், குடிநீர் வடிகால்வாரிய நிர்வாக பொறியாளர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், குடிநீர் பிரச்சினைக்கு 5 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலைமறியல் போராட்டத்தை கைவிடுவதாகவும், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லையெனில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.