தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்


தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 March 2017 4:30 AM IST (Updated: 2 March 2017 12:26 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வனை கண்டித்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்கதமிழ்செல்வன். இவர், அ.தி.மு.க. மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இவருடைய சொந்த ஊரான கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியில் இவருக்கு திராட்சை தோட்டம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த திராட்சை தோட்டத்தில் புகுந்த சிலர், அங்கு பயிரிடப்பட்டு இருந்த திராட்சை கொடிகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்த சண்முகம், முருகேசன், சங்கிலி ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களில் ஒரு தரப்பினர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாலை மறியல்

இதைத் தொடர்ந்து நாராயணத்தேவன்பட்டியில் மறவர் முன்னேற்ற சங்கம் சார்பில் கிராம மக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சென்று முறையிடுவது என்று முடிவு செய்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று புறப்பட்டு வந்தனர். கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, மதுரை–கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்மாவதி தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடமும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடமும், மறவர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

அந்த மனுவில், ‘திராட்சை கொடிகளை சேதப்படுத்தியதாக கூறி கடந்த ஒரு வார காலமாக எங்கள் சமுதாய உறுப்பினர்களை தொந்தரவு செய்கின்றனர். எனவே எங்கள் சமுதாய உறுப்பினர்கள் மீது எடுத்த நடவடிக்கையை கைவிட வேண்டும். எங்களுக்கு எவ்வித தொந்தரவும் கொடுக்காமல் இருக்குமாறும், எங்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்கவும், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்யும்படியும் கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறி இருந்தனர்.

இதற்கிடையே மறியல் போராட்டத்தை கண்டித்து, தங்கதமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் சிலர் நேற்று கம்பத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு முன்பாக சாமியானா பந்தல் அமைத்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். தகவல் அறிந்த கம்பம் வடக்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இதிரிஸ்கான் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்களிடம் அனுமதியின்றி ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ நடத்தக்கூடாது என்று கூறினார். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story