முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் வாகன நிறுத்தும் இடம் பயன்பாட்டுக்கு வந்தது


முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் வாகன நிறுத்தும் இடம் பயன்பாட்டுக்கு வந்தது
x
தினத்தந்தி 2 March 2017 3:30 AM IST (Updated: 2 March 2017 12:26 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் வாகன நிறுத்தும் இடம் பயன்பாட்டுக்கு வந்தது தமிழக விவசாயிகள் அதிருப்தி

குமுளி,

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கேரள வனத்துறை சார்பில் வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால், தமிழக விவசாயிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

வாகன நிறுத்தும் இடம்

தமிழக–கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்து உள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி சுமார் 8 ஆயிரம் ஏக்கர் ஆகும். இந்த அணையின் மொத்த உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீரை தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இங்குள்ள பேபி அணையை பலப்படுத்தும் பணியை மேற்கொண்ட பிறகு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் பணியை தொடங்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014–ம் ஆண்டு மே மாதம் அளித்த தீர்ப்பில் கூறியிருந்தது.

அதன்படி நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான பணிகள் தொடங்கிய போது, குமுளி அருகே ஆனவச்சால் பகுதியில் வாகன நிறுத்தும் இடம் அமைக்கும் பணியை கேரள அரசு தொடங்கியது. இந்த இடமானது முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைந்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால், இங்கும் தண்ணீர் தேங்கும்.

தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்வதற்காக வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் ‘ஆமை பார்க்’ என்ற இடத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு வருகிறது. ஆமை பார்க் வரை வாகனங்கள் வராமல், ஆனவச்சால் பகுதியிலேயே வாகனங்களை நிறுத்தி வைக்க திட்டமிட்டு, அதற்கான இடம் தேர்வு செய்யும் பணியை கேரள வனத்துறை மேற்கொண்டது.

இடைக்கால தடை

அவ்வாறு வனத்துறை தேர்வு செய்த இடம், முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி என்பதால் வாகன நிறுத்தும் இடம் அமைக்கக்கூடாது என்று குமுளியை சேர்ந்த தாமஸ் ஆபிரகாம் என்பவர் சென்னை தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழக அரசும் இணைந்து கொண்டது. இதையடுத்து, ஆனவச்சாலில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்க பசுமை தீர்ப்பாயம் கடந்த 2015–ம் ஆண்டு செப்டம்பர் 5–ந்தேதி இடைக்கால தடை விதித்தது.

மேலும் இந்த வழக்கில், 2 பேர் கொண்ட ஆய்வுக்குழு அமைத்து, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு இருந்தது. ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளித்து இருந்த நிலையில், ஆனவச்சால் பகுதியில் கட்டிடங்கள் இல்லாத வாகன நிறுத்தும் இடம் அமைத்துக் கொள்ள சில தினங்களுக்கு முன்பு சென்னை தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தற்காலிக உத்தரவை பிறப்பித்தது.

பயன்பாட்டுக்கு வந்தது

இதையடுத்து கேரள வனத்துறை சார்பில் ஆனவச்சாலில் வாகன நிறுத்தும் இடம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. தமிழக விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இதற்கான பணிகள் நடந்தன. இந்த ஆனவச்சால் பகுதியில் வாகன நிறுத்தும் இடம் அமைப்பதால், கேரள மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களும், சுற்றுலா வாகன ஓட்டுனர்களும் பாதிக்கப்பட்டனர். இதனால், அவர்களும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இத்தனை எதிர்ப்புகளையும் மீறி ஆனவச்சாலில் அமைக்கப்பட்ட வாகன நிறுத்தும் இடம் நேற்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தேக்கடி ஏரிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ஆனவச்சாலில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து ஏரிக்கு வனத்துறை சார்பில் பஸ்களில் சுற்றுலா பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதற்காக கேரள வனத்துறை சார்பில் 7 பஸ்கள் இயக்கப்பட்டன.

வழக்கமாக தேக்கடி ஏரிக்கு செல்ல வேண்டும் என்றால், ஒரு நபருக்கு நுழைவு கட்டணம் ரூ.33 செலுத்த வேண்டும். தற்போது வனத்துறை பஸ்சில் அழைத்துச் செல்வதால், நுழைவுக்கட்டணம் ரூ.33, பஸ் கட்டணம் ரூ.20 என மொத்தம் ஒரு நபருக்கு ரூ.53 வசூலிக்கப்பட்டது. வாகன நிறுத்தும் இடம் அமைத்ததால், தமிழக விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும் தமிழக அரசு இந்த பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தி, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை மீட்க வேண்டும் என்று தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story