நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்


நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 March 2017 4:30 AM IST (Updated: 2 March 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை எதிர்த்து போராடி வரும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தனியார் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

 புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இதேபோன்று இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திண்டுக்கல்– பழனி சாலையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களும் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு தனியார் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

போலீஸ் பேச்சுவார்த்தை

இந்த போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

போராட்டத்தில், கலந்து கொண்ட மாணவர்கள் கோ‌ஷங்களை எழுப்பியவாறு இருந்தனர். பின்னர் மாணவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கும். எனவே நீங்கள் கலைந்து செல்லுங்கள் என்று கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் கலைந்து சென்றனர். சுமார் 4 மணி நேரம் நீடித்த போராட்டம் அதன்பிறகே முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story