ரெயில் தண்டவாளம் அருகே உள்ள வீடுகளை காலி செய்ய 24–ந் தேதி வரை அவகாசம்
ரெயில் தண்டவாளம் அருகே உள்ள வீடுகளை காலி செய்ய 24–ந் தேதி வரை அவகாசம் இடிக்க வந்த அதிகாரிகள் திரும்பி சென்றனர்
கோவை,
கோவையில் ரெயில் தண்டவாளம் அருகே உள்ள வீடுகளை இடிப்பதற்காக அதிகாரிகள் சென்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் திரும்பி சென்றனர். மேலும், வீடுகளை காலி செய்ய வருகிற 24–ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
தண்டவாளம் அருகே வீடுகள்கோவை மாநகராட்சி 72–வது வார்டு கடலைகார சந்து அருகே ரெயில் தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தையொட்டி உள்ள பகுதியில் பல ஆண்டுகளாக 40–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ரெயில்வே சட்ட விதிகளின்படி தண்டவாளத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்குள் வீடுகள் இருக்கக்கூடாது.
எனவே கடலைகார சந்து அருகே வீடுகள் தண்டவாளத்தில் இருந்து வெகு அருகில் உள்ளதால் அவற்றை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி அந்த வீடுகளை அகற்ற அதிகாரிகள் சென்ற போது பேச்சுவார்த்தை நடத்தி 1–ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தண்டவாளம் அருகே உள்ள வீடுகளை இடிக்க நேற்று காலை கோவை ரெயில்வே அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாரும் நிறுத்தப்பட்டனர்.
24–ந் தேதி வரை அவகாசம்இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுனன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் சசிரேகா, காட்டூர் செல்வராஜ் ஆகியோர் அங்கு சென்றனர். அவர்கள் ரெயில்வே அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது, ‘ரெயில் பாதை அருகில் வீடு கட்டி உள்ளவர்களுக்கு வெள்ளலூரில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்வதற்கான டோக்கன்கள் விரைவில் வழங்கப்பட உள்ளது. எனவே வீடுகளில் வசிப்பவர்களுக்கு வருகிற 24–ந் தேதி வரை கால அவகாசம் அளிக்க வேண்டும். அதற்குள் அவர்கள் வீடுகளை காலி செய்து கொடுத்து விடுவார்கள். அதன்பின்னர் வீடுகளை இடித்து கொள்ளுங்கள்’ என்று எம்.எல்.ஏ. தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
இதை ரெயில்வே அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். வீடுகளை இடிப்பதற்காக பெண் தொழிலாளர்கள் கோடாரி, கடப்பாரைகளுடன் வந்திருந்தனர். ஆனால் 24–ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டதால் அவர்கள் வீடுகளை இடிக்காமல் திரும்பிச் சென்றனர்.