மர்ம விலங்கு கடித்து குதறியதில் கன்றுக்குட்டி செத்தது


மர்ம விலங்கு கடித்து குதறியதில் கன்றுக்குட்டி செத்தது
x
தினத்தந்தி 2 March 2017 3:00 AM IST (Updated: 2 March 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

பெதப்பம்பட்டி அருகே மர்ம விலங்கு கடித்து குதறியதில் கன்றுக்குட்டி செத்தது.

திருப்பூர் மாவட்டம் பெதப்பம்பட்டி அருகே உள்ள வி.வல்லகுண்டாபுரத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவர் தனது குடும்பத்தினருடன் தோட்டத்து சாளையில் வசித்து வருகிறார். சுந்தரம் கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். தினமும் மாடு மற்றும் கன்றுக்குட்டிகளை அவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கட்டி வைப்பது வழக்கம்.

இதுபோல் நேற்று முன்தினம் தன்னுடைய தென்னந்தோப்பில் 3 கன்றுக்குட்டிகளை அருகருகே கட்டி வைத்துவிட்டு சாளைக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலையில் சாளையில் இருந்து எழுந்த சுந்தரம் கன்றுக்குட்டிகள் கட்டிப்பட்டிருந்த இடத்திற்கு சென்றார். அப்போது அதில் ஒரு கன்றுக்குட்டி செத்துக் கிடந்தது. அதன் மார்புபகுதி கடித்து குதறப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரம் இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனே வனத்துறை அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர்.

மர்ம விலங்கு

பின்னர் கன்று குட்டி செத்துக் கிடந்த இடத்தின் அருகே வனவிலங்கின் கால்தடம் ஏதும் உள்ளதா? என்று பார்த்தனர். அப்போது மர்ம விலங்கின் கால்தடம் பதிவாகி இருந்தது. எனவே நள்ளிரவில் தோப்பில் புகுந்த மர்ம விலங்கு கன்றுக்குட்டியை கடித்து கொன்று இருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுத்தை புலியா?

ஏற்கனவே குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மர்ம விலங்கு நாய்களை கடித்து கொன்றுவருவதாக பொதுமக்கள் கூறிவருகின்றனர். அதனைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மர்ம விலங்கின் கால்தடம் ஏதும் கிடைக்கவில்லை என்பதால் கண்காணிப்பு பணியை கைவிட்டனர்.

இந்நிலையில் வி.வல்லகுண்டாபுரத்தில் கன்றுக்குட்டியை கடித்து கொன்றது சிறுத்தை புலியாக இருக்க கூடும் என கூறி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.


Next Story