தாறுமாறாக ஓடிய லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது; 2 தொழிலாளர்கள் பலி– 4 பேர் படுகாயம் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள்


தாறுமாறாக ஓடிய லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது; 2 தொழிலாளர்கள் பலி– 4 பேர் படுகாயம் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள்
x
தினத்தந்தி 2 March 2017 1:05 AM IST (Updated: 2 March 2017 1:05 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபாகலு பகுதியில் தாறுமாறாக ஓடிய லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.

மங்களூரு,

ஸ்ரீபாகலு பகுதியில் தாறுமாறாக ஓடிய லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது

மேற்கு வங்காள மாநிலம் நியூஅலிபுரா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆசிக்(வயது 26), விகாஸ்(27). இவர்கள் 2 பேரும் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா உப்பினங்கடியில் தங்கி இருந்து தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர். தற்போது உப்பினங்கடி அருகே உள்ள குந்தியாவில் இருந்து ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா வரை சுரங்க பாதைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்காக நேற்று முன்தினம் காலை ஆசிக், விகாஸ், மற்றும் விகாசின் நண்பர்களான சம்பு, பிஜேந்திரா, அத்துவால், ராஜன் ஆகியோர் லாரியில் சென்று கொண்டு இருந்தனர்.

லாரி குந்தியா– சுப்ரமணியா சாலையில் ஸ்ரீபாகலு பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

2 தொழிலாளிகள் பலி

இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து லாரியில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் லாரியின் இடிபாடுகளில் சிக்கி ஆசிக்கும், விகாசும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சம்பு, பிஜேந்திரா, அத்துவால், ராஜன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். அவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து அறிந்த உப்பினங்கடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உப்பினங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story