ஊதிய உயர்வு வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல்
ஈரோடு பிரப்ரோட்டில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வழங்கக்கோரி ‘திடீர்’ சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்து அப்புறப்படுத்தினார்கள். அதன்பின்னர் அவர்கள் சாலையோரத்தில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொழிலாளர் துறைஇதுகுறித்து பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் 450 பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைபார்த்து வருகிறோம். எங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.237 சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்தை வைத்து எங்களால் குடும்பம் நடத்த முடியவில்லை.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக நாள் ஒன்றுக்கு ரூ.437 வழங்கவேண்டும் என்று தொழிலாளர் துறை உத்தரவிட்டு உள்ளது. இதுபற்றி ஈரோடு மாவட்ட பி.எஸ்.என்.எல். நிர்வாகத்திடம் கேட்டால், சென்னை மண்டல அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்ததால் தான் கொடுக்க முடியும் என்று கூறுகிறார்கள்.
போக்குவரத்து பாதிப்புஇதற்கிடையே எங்களுக்கு பழைய ஒப்பந்த சம்பளமான ரூ.5 ஆயிரத்து 600 தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே பழைய ஒப்பந்த சம்பளத்தை ரத்து செய்து விட்டு, தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும்.
இல்லையென்றால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்’ என்றார்கள். இந்த போராட்டத்தால் ஈரோடு –பிரப்ரோட்டில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.