ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்


ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 2 March 2017 3:15 AM IST (Updated: 2 March 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில், 3 ஆயிரத்து 199 கிராமங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம்

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில், 3 ஆயிரத்து 199 கிராமங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடக்கிறது. செம்பாம்பாளையத்தில் நடந்த முகாமை கலெக்டர் எஸ்.பிரபாகர் தொடங்கி வைத்தார்.

கோமாரி நோய் தடுப்பூசி

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடும் முகாம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரத்து 199 கிராமங்களில் நேற்று தொடங்கியது. ஈரோடு அருகே உள்ள செம்பாம்பாளையத்தில் நடந்த முகாமை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்க 6 மாதங்களுக்கு ஒருமுறை கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 11 சுற்றுகள் முடிவுற்று தற்போது 12–வது சுற்று தொடங்கி உள்ளது.

3,199 கிராமங்களில்...

இந்த சுற்றில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 72 ஆயிரத்து 550 கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. மாவட்டத்தில் கால்நடை உதவி மருத்துவர் தலைமையில் 118 குழுக்கள் அமைக்கப்பட்டு 3 ஆயிரத்து 199 கிராமங்களில் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதற்காக ரூ.23 லட்சத்து 35 ஆயிரத்து 630 மதிப்பிலான 3 லட்சத்து 74 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு உள்ளன. 4 மாத கன்றுக்குட்டிகள், சினை மாடுகள் என அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி போடுவதால் கறவை மாடுகளுக்கு பால் குறைபாடு, பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

முகாமில் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ., கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ப.ரவிச்சந்திரன், கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தியின் துணை இயக்குனர் சந்திரசேகரன், கால்நடை நோய்புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கோவிந்தராசு மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story