பெங்களூருவுக்கு குடிநீர் வினியோகம் செய்ய ரூ.1,000 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்
பெங்களூருவுக்கு குடிநீர் வினியோகம் செய்ய ரூ.1,000 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படுவதாக கர்நாடக தொழில்– கட்டமைப்பு வளர்ச்சி கழக தலைவர் தனஞ்செயா கூறினார்.
பெங்களூரு,
பெங்களூருவுக்கு குடிநீர் வினியோகம் செய்ய ரூ.1,000 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படுவதாக கர்நாடக தொழில்– கட்டமைப்பு வளர்ச்சி கழக தலைவர் தனஞ்செயா கூறினார்.
கர்நாடக தொழில் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி கழக தலைவர் தனஞ்செயா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கியாஸ் உபகரணம்பெங்களூருவில் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைவது என்பது மிக மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இதை தடுக்க வேண்டியது நமது கடமை ஆகும். இந்த நோக்கத்தின் அடிப்படையில் நாங்கள் கெயில் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளோம். அதன்படி எங்கள் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு கியாஸ் உபகரணத்தை பொருத்த முடிவு செய்துள்ளோம்.
இதன் மூலம் வாகனங்கள் கியாஸ் பயன்பாட்டில் இயங்கும். இதனால் சுற்றுச்சூழல் மாசு குறையும். அந்த பணியை இன்று (அதாவது நேற்று) தொடங்கி வைத்துள்ளோம். சில வாகனங்களுக்கு அந்த உபகரணத்தை பொருத்தியுள்ளோம். படிப்படியாக எங்கள் அலுவலகத்தில் இயங்கும் அனைத்து வாகனங்களுக்கும் இந்த கியாஸ் உபகரணம் பொருத்தப்படும்.
கியாஸ் நிரப்பும் மையங்கள்மேலும் கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் இதர அரசு வாகனங்களுக்கும் இந்த கியாஸ் உபகரணத்தை பொருத்துமாறு நான் கடிதம் எழுத உள்ளேன். இதன் மூலம் பெங்களூருவில் ஓரளவுக்கு சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியும். தனியார் வாகனங்களும் இந்த உபகரணத்தை பொருத்த முடியும். பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், மூன்று, நான்கு சக்கர வாகனங்களிலும் இந்த உபகரணத்தை கெயில் நிறுவனம் பொருத்துகிறது.
இந்த உபகரணத்தை பொருத்த இருசக்கர வாகனத்திற்கு ரூ.18 ஆயிரமும், 4 சக்கர வாகனத்திற்கு ரூ.48 ஆயிரமும் செலவாகும். இதற்காக பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு காலனியில் கியாஸ் உபகரணம் பொருத்தும் மையத்தை கெயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. இன்னும் சில இடங்களில் அத்தகைய மையத்தை தொடங்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் கெயில் நிறுவனம் பெங்களூருவில் 30–க்கும் அதிகமான கியாஸ் நிரப்பும் மையங்களை அமைக்கவும் முடிவு செய்துள்ளது.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்காவிரி பிரச்சினை உண்டாகும்போது போராட்டங்கள் வெடிக்கின்றன. இதனால் அரசு சொத்துகள் சேதம் அடைகின்றன. காவிரி ஆறு இப்போது வறண்டுவிட்டது. இனி இதை நம்பியே இருக்க முடியாது. எனவே, பெங்களூரு நகருக்கு குடிநீர் வினியோகம் செய்ய கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.1,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடற்கரை நகரமான மங்களூருவில் இந்த மையம் அமைக்கப்பட்டு, மங்களூரு நகரில் குடிநீர் வினியோகம் செய்யப்படும். பிறகு அங்கிருந்து குழாய்களை அமைத்து பெங்களூருவுக்கு குடிநீர் கொண்டு வரப்படும். சென்னையில் இத்தகைய கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது வெற்றிகரமாக செயல்படுகிறது. அதே மாதிரியில் நாங்கள் இந்த திட்டத்தை மங்களூருவில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம். மிக விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் தினமும் 10 கோடி லிட்டர் கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்தப்படும்.
இவ்வாறு தனஞ்செயா கூறினார்.
குழாய் மூலம் சமையல் எரிவாயுஇதைதொடர்ந்து கெயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “பெங்களூருவில் குழாய் மூலம் சமையல் எரிவாயு வினியோகம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நகரில் தற்போது எச்.எஸ்.ஆர்.லே–அவுட், சிங்கசந்திரா உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கி மீட்டரை பொருத்தியுள்ளோம். இதில் 2 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு வினியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. அடுத்த ஆண்டு 40 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு வினியோகம் செய்யும் வசதி செய்யப்படும். அடுத்த 3, 4 ஆண்டுகளில் பெங்களூரு நகர் முழுவதும் இந்த வசதி ஏற்படுத்தப்படும்“ என்றனர்.