நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்திற்கு மறுத்ததால் தனியார் நிறுவன பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்திற்கு கம்ப்யூட்டர் என்ஜினீயர் மறுத்ததால் தனியார் நிறுவன பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு,
நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்திற்கு கம்ப்யூட்டர் என்ஜினீயர் மறுத்ததால் தனியார் நிறுவன பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக கம்ப்யூட்டர் என்ஜினீயர், அவரது தாயை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன பெண் அதிகாரிபெங்களூரு ராஜராஜேசுவரி நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் நாகலட்சுமி (வயது 31). இவர், எம்.பி.ஏ. படித்துவிட்டு, பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். பெங்களூரு சுதாமன்நகர் அருகே வசிப்பவர் கார்த்திக். கம்ப்யூட்டர் என்ஜினீயரான கார்த்திக்கிற்கும், நாகலட்சுமிக்கும் கடந்த 2015–ம் ஆண்டு இறுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில், நிச்சயதார்த்தம் நடந்த ஓரிரு வாரத்தில் கார்த்திக்கின் தந்தை திடீரென்று இறந்து விட்டார்.
இதனால் கார்த்திக்கிற்கும், நாகலட்சுமிக்கும் உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டாம் என்றும், ஒரு ஆண்டுக்கு பின்பு திருமணத்தை நடத்தி கொள்ளலாம் என்றும் 2 வீட்டு குடும்பத்தினரும் பேசி முடிவு செய்தார்கள். ஆனாலும் அவர்களது திருமணம் சில காரணங்களால் தள்ளிச் சென்றது. பின்னர் வருகிற மே மாதம் 29–ந் தேதி கார்த்திக்– நாகலட்சுமி திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கார்த்திக், நாகலட்சுமி குடும்பத்தினர் செய்து வந்தார்கள்.
திருமணத்திற்கு மறுப்புஇந்த நிலையில், நிச்சயதார்த்தம் நடந்த பிறகு தனது தந்தை இறந்து விட்டதால் நாகலட்சுமி தனக்கு அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று கார்த்திக் நினைத்ததாக தெரிகிறது. மேலும் நாகலட்சுமியை திருமணம் செய்ய தனக்கு விருப்பம் இல்லை என்றும், அதனால் திருமணத்திற்கான ஏற்பாடுகளை நிறுத்தி விடும்படியும் அவரது பெற்றோருக்கு கார்த்திக் கடிதம் எழுதி அனுப்பிவைத்தார். கார்த்திக் தன்னை திருமணம் செய்ய மறுப்பது பற்றி நாகலட்சுமிக்கு தெரியவந்தது. உடனே அவர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.
அப்போது அவரிடம், நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு தனது தந்தை இறந்து விட்டதால், உங்களை (நாகலட்சுமி) திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று கார்த்திக் சொல்லியதாக கூறப்படுகிறது. இதனால் நாகலட்சுமி மனம் உடைந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் தனது பெற்றோர் வெளியே சென்றிருந்த போது திடீரென்று தூக்குப்போட்டு நாகலட்சுமி தற்கொலை செய்துகொண்டார். நாகலட்சுமியின் பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது தங்களது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்கள்.
கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைதுஇதுபற்றி அறிந்ததும் ராஜராஜேசுவரி நகர் போலீசார் விரைந்து வந்து நாகலட்சுமியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் அவர் எழுதி வைத்திருந்த 4 பக்கங்கள் அடங்கிய கடிதமும் போலீசார் கையில் சிக்கியது. அந்த கடிதத்தில் தான் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று கூறி திருமணத்திற்கு கார்த்திக் மறுத்து விட்டதால் தற்கொலை முடிவை எடுத்ததாக நாகலட்சுமி எழுதி வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து ராஜராஜேசுவரி நகர் போலீஸ் நிலையத்தில் நாகலட்சுமியின் தந்தை புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், அவரது தாய் கீதாவை கைது செய்தார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.