தொடர் கொள்ளை எதிரொலி: 32 கிராமங்களையும் கண்காணிக்க தனிப்படை அமைப்பு


தொடர் கொள்ளை எதிரொலி: 32 கிராமங்களையும் கண்காணிக்க தனிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 2 March 2017 3:30 AM IST (Updated: 2 March 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

தொடர் கொள்ளை சம்பவம் எதிரொலி: 32 கிராமங்களையும் கண்காணிக்க தனிப்படை அமைப்பு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தகவல்

நெல்லிக்குப்பம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் நடந்து வரும் இந்த தொடர் கொள்ளை சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறியதாவது:–

தொடர் கொள்ளை சம்பவம் எதிரொலியால் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட 32 கிராமங்களையும் கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.

3 தனிப்படைகள் அமைப்பு

நெல்லிக்குப்பம் போலீஸ் நிலைய பகுதிக்குள் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து விட்டது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க கடலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் தலைமையில் ஒரு தனிப்படை, கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையில் ஒரு தனிப்படை, நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெபஸ்டின் தலைமையில் ஒரு தனிப்படை என 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள். புதுச்சேரி எல்லையை ஒட்டி இந்த கிராமங்கள் இருப்பதால் அந்த மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பலுக்கு இதில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

24 மணி நேரமும் கண்காணிப்பு

நெல்லிக்குப்பம் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள 32 கிராமங்களையும் கண்காணிக்க மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிட்டிபாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையில் 64 போலீசார் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அந்த கிராமங்களை 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிப்பார்கள்.

இது தவிர புதுச்சேரியை மாநிலத்தை ஒட்டியுள்ள கடலூர் மாவட்ட பகுதி சோதனைச்சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். நெல்லிக்குப்பம் பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் 3 வாகனங்களில் சென்றபடி இரவு நேரத்தில் கண்காணிப்பார்கள். இதேபோல் மாவட்டத்தில் மற்ற இடங்களிலும் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் தடுக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலை ரோந்து போலீசார் 14 வாகனங்களில் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை, கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

மாவட்டம் முழுவதும் உள்ள 46 போலீஸ் நிலைய பகுதிகளிலும் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும். சித்தரசூரில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 5 பேரும், மருதாடு கொள்ளை சம்பவத்தில் 2 பேரும் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. விரைவில் அந்த கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் பிடிபடுவார்கள்.

இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.

(பாக்ஸ்) போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை

சித்தரசூர் கிராமத்தில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் உடனடியாக நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அங்கு பணியில் இருந்த போலீசார் மிகவும் காலதாமதமாக சம்பவ இடத்துக்கு வந்தனர். இதனால் கொள்ளை கும்பல் எளிதில் தப்பி ஓடி விட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், நெல்லிக்குப்பம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயதேவி, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஹரிசங்கர், போலீஸ்காரரர் வைத்தியநாதன் ஆகிய 3 பேரும் கொள்ளை சம்பவம் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவித்தும், உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்லாமல் பணியின் போது அலட்சியமாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் துறை ரீதியான நடவடிக்கை எடுத்தார்.


Next Story