சுங்கச்சாவடி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்


சுங்கச்சாவடி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 2 March 2017 4:00 AM IST (Updated: 2 March 2017 1:36 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மைய ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டி,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மைய ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டணமின்றி செல்வதால் அனைத்து வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சுங்கச்சாவடி மையம்

விழுப்புரம் அருகே சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மையம் உள்ளது. இங்கு 200 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கான போனஸ் வழங்குவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை போனஸ் வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு போனஸ் வழங்கவேண்டும், ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரில் முன்னணி ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளும் சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து தொடர்வேலை நிறுத்தப்போராட்டம் செய்வதாக அறிவித்திருந்தனர்.

பேச்சுவார்த்தை தோல்வி

இந்த நிலையில் நேற்று புதுச்சேரியில் உள்ள மத்திய உதவி தொழிலாளர் இயக்குனர் அலுவலகத்தில் துணை இயக்குனர் கணேசன் முன்னிலையில் சுங்கச்சாவடி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் சமாதான கூட்டம் நடைபெற்றது. ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் ரவி, விக்கிரவாண்டி சங்க தலைவர் சுந்தர், செயலாளர் பாலாஜி, பெருமாள், சுங்கச்சாவடி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசேகர், சுங்கச்சாவடி மைய அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

வேலை நிறுத்த போராட்டம்

இதையறிந்த சுங்கச்சாவடி ஊழியர்கள், ஏற்கனவே அறிவித்திருந்தபடி தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இரவு 8.15 மணியளவில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை மற்றும் திருச்சி மார்க்கமாக சென்ற அனைத்து வாகனங்களும் கட்டணமின்றி சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இதுபற்றி தகவலறிந்த விக்கிரவாண்டி சப்–இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊழியர்கள், தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story