தனுஷ்கோடி கடற்கரையில் 1,021 ஆமை முட்டைகள் சேகரிப்பு


தனுஷ்கோடி கடற்கரையில் 1,021 ஆமை முட்டைகள் சேகரிப்பு
x
தினத்தந்தி 2 March 2017 3:30 AM IST (Updated: 2 March 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி கடற்கரையில் ஒரே நாளில் 1,021 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.

தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் மாவட்ட வன உயிரினகாப்பாளர் தீபக்பெல்கி உத்தரவின்பேரில் நேற்று அதிகாலை வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் முதல் கம்பிப்பாடு, அரிச்சல்முனை வரையிலான கடற்கரை பகுதியில் 10 இடங்களில் ஆமைகள் இட்டு சென்ற 1,021 ஆமை முட்டைகள் ஒரே நாளில் சேகரிக்கப்பட்டன.

இந்த ஆமை முட்டைகளை வனத்துறையினர் பாதுகாப்பாக கொண்டு சென்று எம்.ஆர்.சத்திரம் கடற்ரையில் அமைக்கப் பட்டுள்ள குஞ்சு பொரிப்பகத்தில் குழி தோண்டி புதைத்து வைத்தனர். மேலும் ஏற்கனவே புதைத்து வைக்கப்பட்டு இருந்த ஆமை முட்டைகளில் இருந்து 16 ஆமை குஞ்சுகள் தானாகவே வெளியே வந்தன. அந்த ஆமை குஞ்சுகளை பிடித்து வனத்துறையினர் கடலில் விட்டனர்.

7,116 ஆமை முட்டைகள்

இதுகுறித்து வனச்சரகர் சதீஷ் கூறியதாவது:–

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஆமைகள் முட்டையிடும் சீசன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடங்கியது. தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம், கோரி, கம்பிப்பாடு உள்ளிட்ட பல்வேறு கடற்கரை பகுதிகளில் கடந்த 3 மாதத்தில் மட்டும் ஆமைகள் இட்டு சென்ற மொத்தம் 7,116 ஆமை முட்டைகள் வனத்துறையின் மூலம் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு குஞ்சு பொரிப்பகத்தில் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. இதில் இதுவரை 400–க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டு உள்ளன. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தான் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் அதிகஅளவிலான ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story