இயற்கை எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்; 13 பேர் கைது


இயற்கை எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்; 13 பேர் கைது
x
தினத்தந்தி 2 March 2017 4:15 AM IST (Updated: 2 March 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே பனைக்குளத்தில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இயற்கை எரிவாயு எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயுவை பூமிக்கடியில் இருந்து எடுப்பதன் மூலம் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் பாதிக்கும் என அச்சம் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே பருவமழை பொய்த்துப்போய் விவசாயம் அழிந்து வரும் நிலையில் குடிநீருக்கும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் யூனியன் பனைக்குளம் உள்பட 22 இடங்களில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு பணிகள் முடிவடைந்து அந்தந்த எரிவாயு கிணறுகளை சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக இந்த மாவட்டத்தின் முக்கிய கிராமங்களாக உள்ள தேவிபட்டினம், சித்தார்கோட்டை, அத்தியூத்து, ஆற்றங்கரை, பிரப்பன்வலசை, புத்தனேந்தல், அச்சடிபிரம்பு, பெருவயல், சாத்தக்கோன்வலசை, கீழநாகாச்சி, பழங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மண்எண்ணெய் வளம் நிறைந்திருப்பதாகவும், அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறி சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும், விவசாயம் செய்யும் பகுதிகளிலும் அதற்கான குழாய்களை அமைத்துள்ளன.

இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால் அந்தபகுதி மக்களும் இதனை கண்டுகொள்ளவில்லை. மண்டபம் யூனியன் பனைக்குளம் கடற்கரைக்கு செல்லும் பகுதியில் தனியார் குடிநீர் நிறுவனத்துக்கு அருகே இயற்கை எரிவாயு எடுப்பதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக இந்த பகுதி மக்களும் எதிர்காலத்தில் தங்களுக்கும் இதுபோன்ற ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுகின்றனர். இதன் காரணமாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் களத்தில் இறங்கி போராட முடிவு செய்துள்ளனர். இதனால் நெடுவாசலை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திலும் இதுபோன்ற போராட்டம் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுஉள்ளது.

13 பேர் கைது

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக இயற்கை எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 2 வக்கீல்கள் உள்பட 13 இளைஞர்கள் பனைக்குளம் பஸ் நிலையம் அருகே அமர்ந்து மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட அனுமதி பெற்றுள்ளீர்களா? என விசாரித்தனர். அப்போது எங்கள் பகுதியில் நிலத்தடி நீரை காப்பாற்றுவதற்காகவும், விவசாய நிலங்கள் அழிந்து விடாமல் காப்பதற்கும் மத்திய–மாநில அரசுகளுக்கு எதிராக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதனை ஏற்க மறுத்த போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததை தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரையும் கைது செய்து தேவிபட்டினம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு பனைக்குளம் பஸ் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுஉள்ளனர்.


Next Story