கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை
சேடபட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றியங்களில் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை
உசிலம்பட்டி,
சேடபட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றியங்களில் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர், கலெக்டர் ஆய்வு செய்தனர்.
நடவடிக்கைசேடபட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது குறித்த நடவடிக்கைகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மாவட்டத்தில் இந்த வருடம் பருவமழை பொய்த்ததினால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உள்ளது. அதைத்தொடர்ந்து உசிலம்பட்டி தொகுதிக்கு உள்பட்ட சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் கலெக்டர் பேசியதாவது:– சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 கிராம ஊராட்சிகளுக்கு உள்பட்ட 118 கிராமங்களில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அதற்கு தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் தெருவிளக்கு வசதிகள், சுகாதாரம் குறித்து பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் எழுமலை பேரூராட்சி நிர்வாகமும் விழிப்புடன் செயல்படவேண்டும். ஊராட்சி செயலர்கள் அனைவரும் மெத்தனமாக இருக்காமல் தெரு விளக்கு முறையாக எரிகிறதா, குடிநீர் பொதுமக்களுக்கு முறையாக வழங்கப்படுகிறதா என்று தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அர்ப்பணிப்பு உணர்வுதொடர்ந்து அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பேசியதாவது:– சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு வறட்சி இந்த வருடம் நமது உசிலம்பட்டி பகுதியில் ஏற்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை மழை பெய்தால் ஓரளவிற்கு குடிநீர் பற்றாக்குறையில்லாமல் செய்து விடலாம். ஆனால் கோடை மழை பொய்த்து போனதால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உருவாகி உள்ளது. எனவே இந்த பிரச்சினையை சரி செய்து பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க அரசு அதிகாரிகள் அதைனைத் சார்ந்த அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் ரோகிணிராமதாஸ், திட்ட அலுவலர், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் லட்சுமி, உசிலம்பட்டி எம்.எல்.ஏ. நீதிபதி, சேடபட்டி ஒன்றிய ஆணையாளர்கள் முருகன், பாலசுப்பிரமணி, எழுமலை பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரி, பொதுக்குழு உறுப்பினர் தனராஜன், ஒன்றிய செயலாளர் பிச்சைராஜன், முன்னாள் ஒன்றியத் தலைவர் முனியம்மாள் பிச்சைமணி, எழுமலை பேரூர் கழக செயலாளர் வாசிமலை, சேடபட்டி கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நகராட்சி அலுவலகத்திலும், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் அமைச்சர், கலெக்டர் ஆய்வு செய்தனர். இதில் உசிலம்பட்டி நகர் செயலாளர் பூமா.ராஜா, முன்னாள் ஒன்றியத்தலைவர் பால்பாண்டி, முன்னாள் நகராட்சி தலைவர் பஞ்சம்மாள், நகராட்சி ஆணையாளர் சுப்பையா, மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பலர் உடன் சென்றனர்.