நடிகர் தனுசுக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும் ‘தந்தை’ என உரிமை கொண்டாடுபவர் ஐகோர்ட்டில் புதிய மனு


நடிகர் தனுசுக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும் ‘தந்தை’ என உரிமை கொண்டாடுபவர் ஐகோர்ட்டில் புதிய மனு
x
தினத்தந்தி 2 March 2017 4:15 AM IST (Updated: 2 March 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் தனுசுக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும் என்று, அவருடைய தந்தை என உரிமை கொண்டாடும் மேலூர் கதிரேசன் ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன்–மீனாட்சி தம்பதியர், மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று உரிமை கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷ் உடலில் உள்ளனவா என்பதை சரிபார்க்க அவர் ஆஜராகும் படி உத்தரவிட்டிருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் ஆஜரான தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டன.

புதிய மனு

இந்தநிலையில் நடிகர் தனுசுக்கும், தனக்கும் மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்று கதிரேசன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘‘நடிகர் தனுஷ் என்னுடைய மகன் என்பதற்கு போதிய ஆதாரம் உள்ளது. அவரை 11–ம் வகுப்பு வரை நான் படிக்க வைத்தேன். இந்த நிலையில் அவர் தன் தற்போதைய சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு உண்மையான பெற்றோராகிய எங்களை அவருடைய பெற்றோர் இல்லை என்று மறுத்து வருகிறார். இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது அவர் தாக்கல் செய்த பிறப்புச் சான்றும், பள்ளி மாற்றுச் சான்றும் போலியானவை. இத்தகைய சூழலில் மரபணு சோதனை நடத்தினால் மட்டுமே இருவருக்கும் இடையேயான உறவை துல்லியமாக கண்டறிய முடியும். எனவே எனக்கும், நடிகர் தனுசுக்கும் மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Next Story