கல்லக்குடியில் 16 ஆண்டுகளுக்கு பின் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 17 வீரர்கள் காயம்


கல்லக்குடியில் 16 ஆண்டுகளுக்கு பின் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 17 வீரர்கள் காயம்
x
தினத்தந்தி 2 March 2017 4:30 AM IST (Updated: 2 March 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

கல்லக்குடியில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 17 வீரர்கள் காயம் அடைந்தனர். போட்டியில் காளைகளை பிடித்த வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.8½ லட்சம் மதிப்பில் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

கல்லக்குடி,

திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் செல்லியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2001-ம் ஆண்டுக்கு பின்னர் சில காரணங்களாலும், அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு மீதான தடை, முன்வைப்பு தொகை போன்ற காரணங்களாலும் கடந்த 16 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியதாலும், செல்லியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டும் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று நேற்று கல்லக்குடி ஏரிக்கரையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இதையொட்டி நேற்று காலை செல்லியம்மன் கோவிலுக்கு கோவில் காளைகள் அழைத்து வரப்பட்டன. அங்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கோவில் காளைகளை அலங்கரித்து, மேளதாளம் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஏரிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் மாவட்ட வருவாய் அதிகாரி தர்ப்பகராஜ் தலைமையில் கோவில் காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

240 காளைகள்

முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்க திருச்சி, சேலம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து 241 காளைகள் கல்லக்குடிக்கு அழைத்து வரப்பட்டன. அவற்றை கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் ஒரு காளை உடல் நலக்குறைவு காரணமாக போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து 240 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன.

மேலும் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 327 மாடுபிடி வீரர்கள், மருத்துவ குழுவினர் பரிசோதனைக்கு பின்னர் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து 2 பிரிவாக 5 வண்ணங்களில் பனியன் அணிந்து வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர்.

17 பேர் காயம்

வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தும், துள்ளிக்குதித்தும் மைதானத்திற்குள் வந்தன. அவற்றை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டன. சில காளைகள் பிடிபடாமலும், சில காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடிவிட்டும், எல்லைக்கோட்டை தாண்டி சென்றன. போட்டியின்போது வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்து வெளியே வந்த ஒரு காளையின் கால் ஒடிந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவ குழுவினர், அந்த காளைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த காளை, ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் காளைகள் முட்டி மாடுபிடி வீரர்கள் 17 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த 2 பேர் மேல்சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

1 பவுன் மோதிரம்

ஜல்லிக்கட்டில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்கக்காசு, வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, சைக்கிள், நாற்காலி, பை, தட்டுகள் போன்ற பரிசுப்பொருட்கள் மொத்தம் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டன. இதில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரனுக்கு 1 பவுன் மோதிரம், ரூ.5 ஆயிரம் ரொக்கம், 2 வெள்ளிக்காசுகள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியை திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கோட்டாட்சியர் மணிவண்ணன், தாசில்தார் ஜவஹர்லால்நேரு, பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் இருந்து ஆண்களும், பெண்களுமாக வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், கூடுதல் துணை சூப்பிரண்டு கணேசன் மற்றும் 4 துணை சூப்பிரண்டுகள், 19 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பாதுகாப்புக்காக லால்குடி, புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள், வாகனங்களுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட் டிருந்தனர்.


Next Story