ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு தாயுடன் வந்த சிறுவன் கடத்தல்


ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு தாயுடன் வந்த சிறுவன் கடத்தல்
x
தினத்தந்தி 2 March 2017 2:25 AM IST (Updated: 2 March 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு தாயுடன் வந்த சிறுவனை பிஸ்கெட் கொடுத்து கடத்திச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராயபுரம்,

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு தாயுடன் வந்த சிறுவனை பிஸ்கெட் கொடுத்து கடத்திச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிறுவன்

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் பரக்கத் அலி (வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி உசேனா (32). இவர்களின் மகன் ஆசிப் (3).

தைராய்டு சிகிச்சைக்காக மகன் ஆசிப்புடன் ராயபுரம் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு உசேனா நேற்று வந்தார். ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மகனை ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு உசேனா வரிசையில் நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் மகன் அங்கு இல்லாததை கண்டு உசேனா அதிர்ச்சி அடைந்தார். உடனே ஆஸ்பத்திரி முழுவதும் தேடிப்பார்த்தும் ஆசிப் கிடைக்கவில்லை.

கடத்தல்

பின்னர் இது குறித்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாக போலீசில் உசேனா புகார் செய்தார். அதன் பேரில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடம் சிறுவன் கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் ஆசிப்புக்கு பிஸ்கெட் கொடுத்து தூக்கிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸ் துணை கமிஷனர் ஜெயகுமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தனிப்படை அமைப்பு

அதைத்தொடர்ந்து துணை கமிஷனர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் சிறுவனையும், அவனை கடத்திச் சென்ற மர்ம நபர் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், சிறுவன் ஆசிப் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் முக்கிய சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோவை ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.

பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story