ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது


ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது
x
தினத்தந்தி 2 March 2017 4:15 AM IST (Updated: 2 March 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் கடை பிடிக்கும் தவக்காலம் நேற்று தொடங்கியது. இதையொட்டி சேலத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

சேலம்,


கிறிஸ்தவர்களின் கடவுளான ஏசு பூமியில் பிறந்து, சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்தார் என்று புனித நூலான பைபிளில் சொல்லப்பட்டுள்ளது. ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாகவும், உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் தினமாகவும் கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு வரும் 40 நாட்கள் (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) தவக்காலமாக அவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தவக்காலத்தின் தொடக்க நாள் சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது. கடவுளின் அருளை பெற நினைப்பவர்கள், தங்களை தாழ்த்தி முழு மனதுடன் கடவுளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை சாம்பல் புதன் நினைவூட்டுகிறது.

கத்தோலிக்க தேவாலயங்களில் சாம்பல் புதனில், ‘‘மனிதனே நீ மண்ணாய் இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் என்பதை மறவாதே‘‘ என்று கூறி பாதிரியார்கள் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலைக்கொண்டு சிலுவை அடையாளம் வரைவது வழக்கம்.

சிறப்பு பிரார்த்தனை


சாம்பல் புதன் நேற்று தொடங்கியதையொட்டி கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து தேவாலயங்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சேலம் 4 ரோடு அருகே உள்ள குழந்தை ஏசு பேராலயத்தில் பங்குதந்தை கிரகோரிராஜன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கலந்து கொண்டவர்களின் நெற்றியில் பாதிரியார்கள் சாம்பலைக்கொண்டு சிலுவை அடையாளமிட்டனர். சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் சேகரகுரு மில்லர் ஜெயபால் தலைமையில் பிரார்த்தனை நடந்தது.

சேலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதனையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலிகள் நடந்தன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story