ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்ட மும்பை சிறுவனுக்கு உற்சாக வரவேற்பு உத்தவ் தாக்கரே வாழ்த்து


ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்ட மும்பை சிறுவனுக்கு உற்சாக வரவேற்பு உத்தவ் தாக்கரே வாழ்த்து
x
தினத்தந்தி 2 March 2017 4:30 AM IST (Updated: 2 March 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்ட மும்பை சிறுவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்தார்.

மும்பை,

ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்ட மும்பை சிறுவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்தார்.

மும்பை சிறுவன்

மும்பை கலினா பகுதியில் உள்ள குடிசைப்பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் சன்னி பவார். இவனது தந்தை திலீப். அரசு அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றியவர். தாய் வாசு. இல்லத்தரசி. சன்னி பவாருக்கு தம்பி மற்றும் தங்கை உள்ளனர்.

சன்னி பவார் ஏர் இந்தியா மாடல் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் சன்னி பவாருக்கு ‘லயன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் சிறப்பாக நடித்த அவனுக்கு, சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது.

ஆஸ்கர் விருதுக்கு லயன் படம் தேர்வான போதிலும், அதற்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் விழாவில் கோட்சூட் அணிந்து கலந்துகொண்ட மும்பை குடிசை பகுதி சிறுவன் சன்னி பவார், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தான். அத்துடன் ஹாலிவுட் முன்னணி நட்சத்திரங்களும் அவனுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

உற்சாக வரவேற்பு

இந்த நிலையில் சன்னி பவார் நேற்று மும்பை வந்தான். விமான நிலையத்தில் அவனுக்கு பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் மும்பைக்கு பெருமை சேர்த்த சன்னி பவாரை சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே சந்திக்க விரும்பினார். இதையடுத்து சன்னி பவார் குடும்பத்துடன் நேற்று பாந்திராவில் உள்ள ‘மாதோஸ்ரீ’ இல்லத்திற்கு சென்று உத்தவ் தாக்கரேயை சந்தித்து வாழ்த்து பெற்றான்.

அப்போது, உத்தவ் தாக்கரேயும், கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஆதித்ய தாக்கரேயும் சன்னி பவாரை தூக்கி பிடித்து அரவணைத்தனர். மேலும், உனக்கு எந்த நடிகரை பிடிக்கும் என சன்னி பவாரிடம் உத்தவ் தாக்கரே கேட்டார். அதற்கு ‘ரஜினிகாந்த், அஜய் தேவ்கன் மற்றும் ஹிருத்திக்ரோஷன் ஆகியோர் எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்று சன்னி பவார் பதில் கூறினான். 

Next Story