டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ‘ஸ்டிக்கர்’ ஒட்ட முயன்ற பா.ம.க.வினர் கைது


டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ‘ஸ்டிக்கர்’ ஒட்ட முயன்ற பா.ம.க.வினர் கைது
x
தினத்தந்தி 2 March 2017 3:08 AM IST (Updated: 2 March 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ‘ஸ்டிக்கர்’ ஒட்ட முயன்ற பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ‘ஸ்டிக்கர்’ ஒட்ட முயன்ற பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்டிக்கர் ஒட்ட முயற்சி

காஞ்சீபுரத்தில் உள்ள காமராஜர் வீதி, காந்திரோடு, ரங்கசாமிகுளம், காஞ்சீபுரம் அருகே கரியன்கேட் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்த டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்ற வாசகம் பொருந்திய ஸ்டிக்கரை பா.ம.க.வினர் ஒட்ட சென்றனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் வெற்றிச்செல்வன், லட்சுமிபதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது மதுக்கடைகளில் ஸ்டிக்கரை ஒட்ட முயன்றதாக காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் பெ.மகேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி கமலம்மாள், வ.உமாபதி, செவிலிமேடு செல்வராஜ், செந்தில் உள்பட 46 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதே போல காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மதுராந்தகம் பஸ் நிலையத்திலுள்ள டாஸ்மாக் கடையில் மாநில துணைபொது செயலாளர் பொன்.கங்காதரன் தலைமையில் மாவட்ட செயலாளர் ஆத்தூர் வா.கோபாலகண்ணன் முன்னிலையில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்றனர். அப்போது மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் அந்தோணிஸ்டாலின் தலைமையிலான போலீசார் மாவட்ட நிர்வாகிகள் ஏ.ஜி.குணசேகரன், குமார் ஜீவா, பக்கிரிசாமி, சந்தோஷ், சபரி உள்ளிட்ட 25 பா.ம.க நிர்வாகிகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் டாக்டர் வ.பாலா என்கின்ற பாலயோகி, மாநில துணைத்தலைவர் நா.வெங்கடேசன், மாநில இளைஞரணி செயலாளர் தினேஷ்குமார், திருவள்ளூர்மேற்கு மாவட்ட செயலாளர் பூபதி, மாவட்ட துணைச்செயலாளர் விஜயராகவன், மாவட்ட அமைப்பு செயலாளர் கண்ணன், ஒன்றிய துணைத்தலைவர் மோகன் உள்பட 100-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தனர். பின்னர் அவர்கள் கடையின் முன்னதாக கோஷங்களை எழுப்பி விட்டு கலைந்து சென்றனர்.

மாமல்லபுரம்

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பூஞ்சேரியில் உள்ள டாஸ்மாக் கடையின் வழிகாட்டி பலகை மீது போலீசாரின் தடையை மீறி ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஈடுபட்டனர். காஞ்சீபுரம் மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் பி.வி.கே.வாசு, மாவட்ட தலைவர் என்.கணேசமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் மல்லை ரா.ராஜசேகர் தலைமையில் பா.ம.க.வினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீஸ் இனஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பா.ம.க.வினர் 50 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

Next Story