விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் காப்பீட்டு தொகை பெற போலீஸ் இணையதளம்


விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் காப்பீட்டு தொகை பெற போலீஸ் இணையதளம்
x
தினத்தந்தி 2 March 2017 3:13 AM IST (Updated: 2 March 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் காப்பீட்டு தொகை பெற போலீஸ் இணையதளத்தை போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர்,

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் காப்பீட்டு தொகை பெற போலீஸ் இணையதளத்தை போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தொடங்கி வைத்தார்.

இணையதளம் தொடக்கம்

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் காப்பீட்டு தொகை பெற ஏதுவாக போலீஸ் இணையதளத்தை திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் நேற்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தொடங்கி வைத்தார். அவருடன் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்- இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, பாரதி மற்றும் திரளான போலீசார் உடனிருந்தனர்.

காப்பீட்டு தொகை

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் கூறியதாவது:-

போலீஸ் நிலையங்களில் பதியப்படும் வழக்குகளை போலீஸ் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். வாகன விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் காப்பீட்டு தொகையை எளிதில் விரைவாக பெற்று பயன்பெறும் விதமாக வழக்குக்கு தேவையான விபத்து பதிவேடு, காயச்சான்று, பிரேத பரிசோதனை சான்று, மோட்டார் வாகன தணிக்கை சான்று, வாகன பதிவுச்சான்று, வாகன காப்பீட்டு சான்று, வாகன ஓட்டுனர் உரிமம், இசைவளிச்சான்று, மாதிரி வரைபடம், பார்வை மகஜர், முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கை என 12 சான்றுகள் போலீஸ் நிலைய இணையதளங்களில் பதிவேற்றப்படுகிறது.

இதனால் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் காப்பீட்டு தொகை பெறுவதற்கு தேவையான சான்றுகளை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் அந்த நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி அரசுக்கு கட்டணம் செலுத்தி தேவையான சான்றுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலமாக சாலை விபத்துகனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக காப்பீட்டு தொகை பெற ஏதுவாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி உத்தரவின்பேரில் காஞ்சீபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரமணி போலீஸ் இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்துகொண்டனர். 

Next Story