மாவட்டம் முழுவதும் 16 ஆயிரத்து 665 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினர் 84 பேர் தேர்வுக்கு வரவில்லை
சிவகங்கை மாவட்டம் முழுவதும் பிளஸ்–2 தேர்வை 16 ஆயிரத்து 665 மாணவ–மாணவிகள் எழுதினர்.
சிவகங்கை,
பிளஸ்–2 தேர்வுஒவ்வொரு மாணவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் தேர்வாக பிளஸ்–2 தேர்வு உள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் தனிதேர்வர்கள் உள்பட மொத்தம் 16 ஆயிரத்து 739 மாணவர்கள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 55 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 3,376 மாணவர்களும், 4,295 மாணவிகளும் என 7,671 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்காக 28 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 4,044 மாணவர்களும், 5,024 மாணவிகளும் என 9,068 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்காக 27 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
84 பேர் தேர்வுக்கு வரவில்லைஇந்தநிலையில் நேற்று நடைபெற்ற தமிழ் முதல் தாள் தேர்வை நேற்று 16 ஆயிரத்து 665 பேர் எழுதினர். மேலும் இந்த தேர்வில் தனிதேர்வர்கள் 13 பேர் உள்பட மொத்தம் 84 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வை கண்காணிக்க 55 முதன்மை கண்காணிப்பாளர்கள், 55 துறை அலுவலர்கள் மற்றும் இணை இயக்குனர், முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தலைமையில் 7 பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆய்வுமுன்னதாக தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் செல்போன் கொண்டு வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதேபோல் தேர்வு கண்காணிப்பாளர்களும் செல்போன் வைத்திருக்கக்கூடாது. மீறினால் மாணவர்கள், கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தேர்வு ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தேர்வுத்துறை எச்சரித்தது. தேர்வுகள் நடைபெறுவதை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி செந்திவேல்முருகன், மாவட்ட கல்வி அதிகாரிகள் பார்த்தசாரதி, மாணிக்கம், மாரிமுத்து, அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் அப்துல்லா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். தேர்வு நடைபெற்ற மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்படிருந்தது.