12 மையங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்களை பெறலாம் முதன்மைக்கல்வி அதிகாரி தகவல்


12 மையங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்களை பெறலாம் முதன்மைக்கல்வி அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 3 March 2017 4:15 AM IST (Updated: 2 March 2017 6:50 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஏற்பாடு செய்துள்ள 12 மையங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு

சிவகங்கை,

ஆசிரியர் தகுதித்தேர்வு

சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஆசிரியர் தகுதித்தேர்வுகள் வருகிற ஏப்ரல் மாதம் 29 மற்றும் 30–ந்தேதி என 2 நாட்கள் நடக்கிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 6–ந்தேதி முதல் 22–ந்தேதி வரை வினியோகம் செய்யப்படுகிறது. விண்ணப்பங்களை பெறுவதற்காக மாவட்டம் முழுவதும் 12 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவை, தேவகோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளி, கண்ணங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி ராம.செ.நகராட்சி உயர்நிலைப்பள்ளி, உலகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் பாபா அமீர் பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிங்கம்புணரி அன்னை வேளாங்கன்னி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை அல்லீஸ் மில்லர் மகளிர் உயர்நிலைப்பள்ளி, மானாமதுரை சி.எஸ்.ஐ. உயர்நிலைப்பள்ளி, திருப்புவனம் புனித மரியன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காளையார்கோவில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், இளையான்குடி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி.

விண்ணப்பிக்கலாம்

மேலும் இந்த தேர்வு மையங்களில் ரூ.50 செலுத்தி விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். தாள் 1, தாள் 2 ஆகிய 2 தேர்வுகளையும் எழுத விரும்புவோர் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 23–ந்தேதிக்குள் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தேவகோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story