மாவட்டத்தில் பிளஸ்–2 பொதுத் தேர்வு தொடங்கியது 22 ஆயிரத்து 891 பேர் எழுதினார்கள்


மாவட்டத்தில் பிளஸ்–2 பொதுத் தேர்வு தொடங்கியது 22 ஆயிரத்து 891 பேர் எழுதினார்கள்
x
தினத்தந்தி 3 March 2017 4:30 AM IST (Updated: 2 March 2017 7:17 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

கிருஷ்ணகிரி,

பிளஸ்–2 தேர்வு

பிளஸ்–2 தேர்வு நேற்று தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 53 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 22 ஆயிரத்து 891 பேர் எழுதினார்கள். அதில் 218 பேர் நேற்று தேர்வு எழுத வரவில்லை. இதை முன்னிட்டு வினாத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த மையத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. தடையில்லாத மின்சாரத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு பணியில் 53 முதன்மை கண்காணிப்பாளர்களும், 11 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களும், 53 துறை அலுவலர்களும், 21 கூடுதல் துறை அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பறக்கும் படைகள்

மேலும் மாவட்டம் முழுவதும் தேர்வு அறைகளை கண்காணிப்பதற்காக 1336 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதற்காக 115 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் தேர்வு நடைபெற்ற மையங்களை கண்காணித்தனர். மேலும் பார்வையற்ற மாணவ, மாணவிகள் கேள்விக்கான பதிலை கூற ஆசிரிய, ஆசிரியைகள் அதை எழுதினார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வு பணிகளை கண்காணிப்பதற்காக அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் தனி மைய அலுவலராக அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் (மேல்நிலை) உமா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து

பிளஸ்–2 தேர்வுகள் நேற்று தொடங்கியதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் தேர்வுக்கு சென்ற மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து கூறினார்கள்.


Next Story