தொடர் கொள்ளை சம்பவம் எதிரொலி: நெல்லிக்குப்பம் பகுதியில் போலீசார் விடிய, விடிய ரோந்து சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரித்தனர்


தொடர் கொள்ளை சம்பவம் எதிரொலி: நெல்லிக்குப்பம் பகுதியில் போலீசார் விடிய, விடிய ரோந்து சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரித்தனர்
x
தினத்தந்தி 3 March 2017 4:15 AM IST (Updated: 2 March 2017 7:28 PM IST)
t-max-icont-min-icon

தொடர் கொள்ளை சம்பவம் எதிரொலியின் காரணமாக நெல்லிக்குப்பம் பகுதியில் போலீசார் விடிய, விடிய ரோந்து மேற்கொண்டனர்.

நெல்லிக்குப்பம்,

தொடர் கொள்ளை

நெல்லிக்குப்பம் அருகே உள்ள சித்தரசூர் கிராமத்துக்குள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாலையில் புகுந்த 6 பேர் கொண்ட முகமூடி கும்பல், ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 2 வீடுகளில் ரூ.4 லட்சம் நகை–பணத்தை கொள்ளையடித்துச்சென்றனர்.

இதன் தொடர்ச்சியாக மருதாடு கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் மற்றொரு கொள்ளை சம்பவம் நடந்தது. பாலகிருஷ்ணன் மனைவி தேவா(வயது 69) என்பவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட 2 கொள்ளையர்கள், கடப்பாரையால் கதவு பூட்டை உடைத்தது. பின்னர் வீட்டக்குள் புகுந்த அவர்கள், தேவாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.11½ லட்சம் மதிப்புள்ள நகை–பணத்தை கொள்ளையடித்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

விடிய, விடிய ரோந்து

தொடர் கொள்ளை சம்பவம் எதிரொலியால் கிராமங்களை கண்காணிக்க தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். அதன்படி நேற்று முன்தினம் இரவு, மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிட்டிபாபு தலைமையிலான 64 போலீசார் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட 32 கிராமங்களுக்கும் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு நேரில் சென்று, தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனரா? என ஆய்வு செய்தார்.

20 வாலிபர்கள் சிக்கினர்

தனிப்படை போலீசார் விடிய, விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, கிராமப்புறங்களில் நள்ளிரவில் சுற்றித்திரிந்ததாக 20 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், வாலிபர்களின் கைரேகைகளை பதிவு செய்து, அவர்களை விடுவித்தனர்.


Next Story