வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிர் தப்பினர்


வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 3 March 2017 4:15 AM IST (Updated: 2 March 2017 7:49 PM IST)
t-max-icont-min-icon

சரவணம்பட்டி அருகே வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சரவணம்பட்டி,

முதல் தளத்தில் வசித்த தம்பதி

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகபுரம் கம்பன் வீதியில் வசித்து வருபவர் கர்ணன் (வயது 35). அவருடைய மனைவி கிரிஜா (32). இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் முதல் தளத்தில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள். கர்ணன் இணையதளம் மூலம் பங்கு வர்த்தகம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் கிரிஜா நேற்று முன்தினம் இரவு வீட்டில் கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது சிலிண்டரில் கியாஸ் காலியாகி விட்டது. இதனால் கர்ணன் வீட்டில் இருந்த மற்றொரு கியாஸ் சிலிண்டரை மாற்றி கொடுத்தார். அதன்பின்னர் சமையல் செய்து சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்க சென்றனர்.

கியாஸ் சிலிண்டர் வெடித்தது

நள்ளிரவு 1 மணி அளவில் கர்ணன் எழுந்து வீட்டுக்குள் இருக்கும் கழிவறைக்கு செல்ல மின்விளக்கு சுவிட்சை போட்டார். அடுத்த வினாடியே வெடி வெடித்தது போன்று பயங்கர சத்தத்துடன் சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதில், வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. வீட்டின் வரவேற்பு அறையில் போட்டு இருந்த ஷோபா, மேஜை, நாற்காலி ஆகியவை தீப்பற்றி எரிந்தன.

இதை கேட்டு, வீட்டில் தூக்கி கொண்டு இருந்த கிரிஜா மற்றும் குழந்தைகள் அலறி அடித்து கொண்டு எழுந்தனர். வீடு முழுவதும் பற்றி எரிந்ததை பார்த்த கர்ணன், மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட பயங்கர சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பற்றி எரிந்தது.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் கணபதி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சிலிண்டர் வெடித்ததில் வீட்டில் இருந்த டி.வி., பீரோ, கட்டில், மின்விசிறி உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்தது. மேலும் கதவு, மேல்தள கான்கிரீட் போன்றவை சேதம் அடைந்தது. நள்ளிரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்ட போது உடனடியாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மற்ற வீடுகளுக்கு பரவவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

4 பேர் உயிர் தப்பினர்

சிலிண்டர் வெடித்தபோது வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியதில் கிரிஜாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது மற்ற 3 பேரும் காயமின்றி தப்பினார்கள். காயமடைந்த கிரிஜா தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தடயவியல் நிபுணர் சங்கீதா சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை பதிவு செய்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story