விளாநல்லூரில் சிறப்பு கிராம சபை கூட்டம்
பெரணமல்லூர் ஒன்றியம் விளாநல்லூர் கிராமத்தில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
சேத்துப்பட்டு,
பெரணமல்லூர் ஒன்றியம் விளாநல்லூர் கிராமத்தில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊரக உதவி இயக்குனர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். மூத்த குடிமகன் ராஜரத்தினம், முன்னாள் தலைவர் ஜெ.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரணமல்லூர் வட்டார வள சமூக தணிக்கை அலுவலர் து.வெங்கடேசன் வரவேற்றார்.
இதில் கிராம தணிக்கை உதவியாளர்கள் அம்மு, நந்தினி, தீபா, சங்கீதா, தமிழன் ஆகியோர் தேசிய மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் ரூ.67 லட்சம் செலவில் நடைபெற்ற பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.
மேலும் மரக்கன்றுகள் வளர்ப்பு, பண்ணை குட்டை, புதிய சாலை அமைப்பது, நீர்வரத்து கால்வாய் தூர்வாருவது போன்ற தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பொதுமக்கள் பசுமை வீடு, ஆடு, மாட்டு கொட்டகை அமைக்க என 60 மனுக்களை மாவட்ட ஊரக உதவி இயக்குனர் சுந்தர்ராஜிடம் வழங்கினார்கள். முடிவில் ஊராட்சி செயலாளர் டி.வெங்கடேசன் நன்றி கூறினார்.