ஆதார் எண் பெற்றுத் தருவதாக பொதுமக்களிடம் பணம் வசூலித்தால் நடவடிக்கை


ஆதார் எண் பெற்றுத் தருவதாக பொதுமக்களிடம் பணம் வசூலித்தால்  நடவடிக்கை
x
தினத்தந்தி 3 March 2017 3:00 AM IST (Updated: 2 March 2017 8:25 PM IST)
t-max-icont-min-icon

ஆதார் எண் பெற்றுத் தருவதாக பொதுமக்களிடம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை,

ஆதார் எண் பெற்றுத் தருவதாக பொதுமக்களிடம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

கட்டணம் இல்லாத சேவை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதார் சேர்க்கை பணி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலமாக நிரந்தர சேர்க்கை மையங்களில் நடைபெற்று வருகிறது.

நிரந்தர சேர்க்கை மையங்களில் நடைபெறும் புதிய ஆதார் பதிவிற்கு கட்டணம் எதுவும் கிடையாது. இது ஒரு கட்டணம் இல்லாத சேவையாகும். ஆனால் தனிநபர்கள் சிலர் விரைவாக ஆதார் எண் பெற்றுத் தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக தெரிகிறது. பொதுமக்களை ஏமாற்றும் இத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழிமுறைகள் வகுத்துள்ளது.

ரூ.10 ஆயிரம் அபராதம்

இந்த வழிமுறைகளின்படி ஆதார் எண் பெற்றுத் தருவதாக பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கும் நபர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதமாக வசூலிக்கவும், ஒராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் ஆதார் எண்ணை பெற நகராட்சி அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் நிர்வகிக்கப்படும் நிரந்தர சேர்க்கை மையங்களை மட்டும் நேரில் அணுகி பயன்பெறவும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story