சீமைக்கருவேல மரங்களை அகற்ற அனுமதி வழங்க வேண்டும்
மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அனுமதி வழங்க வேண்டும் என கிராமப்புற கல்வி வளர்ச்சி சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை,
மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அனுமதி வழங்க வேண்டும் என கிராமப்புற கல்வி வளர்ச்சி சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கிராமப்புற கல்வி வளர்ச்சி சங்கம்திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு தண்டராம்பட்டு தாலுகா கொட்டையூர் கிராமம் அம்பேத்கர் நகரில் செயல்பட்டு வரும் கிராமப்புற கல்வி வளர்ச்சி சங்கத்தை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்கள் சங்க செயலாளர் தமிழன்பன் தலைமையில் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–
கிராமப்புற மாணவ – மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்த தண்டராம்பட்டு தாலுகாவில் கிராமப்புற கல்வி வளர்ச்சி சங்கம் இயங்கி வருகிறது. கிராமப்புறங்களில் மாணவர்களுக்கு மாலைநேர சிறப்பு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தி வருகிறோம். அதேபோல் இயற்கை பாதுகாப்பு, பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு, மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த தெருமுனை கூட்டம், துண்டு பிரசுரங்கள் போன்றவற்றின் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
அனுமதி வழங்க வேண்டும்தமிழகத்தில் நீர்வளத்தை உறிஞ்சி எடுக்கும் சீமைக்கருவேல மரங்களை வேருடன் வெட்டி அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் காணப்படும் சீமைக்கருவேல மரங்கள் வேருடன் வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மண் வளத்தையும், நீலத்தடி நீரையும் உறிஞ்சி அழிக்கும் சீமைக்கருவேல மரங்களை சங்கத்தின் சார்பில் வேருடன் வெட்டி அகற்ற முடிவு செய்துள்ளோம். எனவே, மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே இதுதொடர்பாக அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்துவிட்டு உரிய பதில் தெரிவிப்பதாக கூறினார்.