பெதப்பம்பட்டி அருகே கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது


பெதப்பம்பட்டி அருகே கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 3 March 2017 5:00 AM IST (Updated: 2 March 2017 9:55 PM IST)
t-max-icont-min-icon

பெதப்பம்பட்டி அருகே கன்றுக்குட்டியை அடித்துக் கொன்ற சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

குடிமங்கலம்,

கன்றுக்குட்டியை அடித்துக்கொன்றது

திருப்பூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, காட்டெருமை, குரங்கு, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. தற்போது கோடைக்காலம் என்பதால் மான், காட்டெருமை ஆகியன இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் சிறுத்தைப்புலி உள்பட விலங்குகளுக்கு உணவு கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. இதனால் சிறுத்தைப்புலிகள் நீண்ட தூரம் சென்று வேட்டையாட தொடங்கி உள்ளன.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் பெதப்பம்பட்டி அருகே உள்ள வி.வல்லகுண்டாபுரத்தில் புகுந்த மர்ம விலங்கானது சுந்தரம் என்பவரது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை கடித்து குதறி கொன்றது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த மர்ம விலங்கின் கால்தடத்தை ஆய்வு செய்தனர். இதில் கன்றுக்குட்டியை கொன்றது சிறுத்தைப்புலி என்பது தெரியவந்தது.

கூண்டு வைக்கப்பட்டது

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் நடமாடி வரும் சிறுத்தைப்புலியை கண்காணிக்க தென்னந்தோப்பில் 2 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், கன்றுக்குட்டியை கடித்துக் கொன்ற இடத்தில் சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த கூண்டுக்குள் ஆடு ஒன்றை கட்டி வைத்துள்ளனர். கண்காணிப்பு கேமரா மூலம் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தையும் கண்காணித்து வருகின்றனர். சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதால் வி.வல்லகுண்டாபுரத்தில் அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது. வீட்டிற்கு வெளியே இரவு நேரங்களில் தூங்கக்கூடாது என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது ‘‘தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் சிறுத்தைப்புலி சமவெளிப்பகுதிக்கு வந்திருக்க கூடும். சிறுத்தைப்புலிகள் நாள் ஒன்றுக்கு பல கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வேட்டையாடும் இயல்புடையவை. தற்போது சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று கூறினர்.


Next Story