பொருட்கள் வழங்குவது இல்லை என புகார்: சேரம்பாடி ரே‌ஷன் கடை முற்றுகை


பொருட்கள் வழங்குவது இல்லை என புகார்: சேரம்பாடி ரே‌ஷன் கடை முற்றுகை
x
தினத்தந்தி 3 March 2017 4:45 AM IST (Updated: 2 March 2017 10:14 PM IST)
t-max-icont-min-icon

பொருட்கள் வழங்குவது இல்லை என புகார் தெரிவித்து சேரம்பாடி ரே‌ஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பந்தலூர்,

ரே‌ஷன் கடை முற்றுகை

பந்தலூர் அருகே பழைய நெல்லியாளம் ரே‌ஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக புகார் தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். மேலும் அத்தியாவசிய பொருட்கள் சரிவர வழங்குவது இல்லை என புகார் தெரிவித்தனர். பின்னர் தாசில்தார் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் சேரம்பாடி சுங்கம் ரே‌ஷன் கடையில் 9 கிலோ புழுங்கல் அரிசியும், 10 கிலோ பச்சை அரிசியும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் சமையல் எண்ணெய், பருப்பு, உளுந்து உள்ளிட்ட பொருட்களும் இல்லை என கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ரே‌ஷன் கடையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் உத்தரவு

இது குறித்து அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. இதையொட்டி பொதுமக்களுக்கு 13 கிலோ புழுங்கல் அரிசியும், 6 கிலோ பச்சை அரிசி வழங்க வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கடை ஊழியர்களுக்கு தொலைபேசி மூலம் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவின்படி அரிசி வழங்கப்பட்டது. இதனால் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, சமையல் எண்ணெய், பருப்பு, உளுந்து, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரே‌ஷன் கடைகளில் கடந்த சில மாதங்களாக வழங்குவது இல்லை. எனவே அவற்றை வழங்க கோரி முற்றுகையில் ஈடுபட்டோம் என்று தெரிவித்தனர். இதனிடையே 10 கிலோ புழுங்கல் அரிசி, 9 கிலோ பச்சை அரிசி, 5 கிலோ கோதுமையை இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story