குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 March 2017 4:30 AM IST (Updated: 2 March 2017 10:30 PM IST)
t-max-icont-min-icon

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க குளிர்பான நிறுவனத்துக்கு தடை விதிக்கக்கோரிய மனுக்களை தள்ளுபடி

மதுரை,

தண்ணீர் எடுக்க தடைகோரி வழக்கு

நெல்லையை சேர்ந்த வக்கீல் பிரபாகர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் செயல்படும் கோககோலா குளிர்பான தொழிற்சாலைக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் குடிநீர், விவசாயம் போன்றவற்றுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, குளிர்பான தொழிற்சாலை தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை கடந்த நவம்பர் மாதம் விசாரித்த ஐகோர்ட்டு, தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க குளிர்பான தொழிற்சாலைக்கு இடைக்கால தடை விதித்தது.

அப்பாவு வழக்கு

இதற்கிடையே இதே கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு தாக்கல் செய்து நிலுவையில் இருந்த வழக்கையும் இந்த வழக்குடன் சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குளிர்பான நிறுவனம் சார்பில் ஏற்கனவே வாதாடப்பட்டது. அப்போது, ‘‘இந்த வழக்கு பொதுநல நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்ட தனிநபர் வழக்கு ஆகும். தாமிரபரணியில் இருந்து வெளியேறும் உபரிநீரில் சிப்காட்டுக்கு வழங்கப்படும் நீரில் 0.2 சதவீதத்தை தான் எங்கள் நிறுவனம் பயன்படுத்துகிறது. பெரும்பகுதி தண்ணீரை மற்ற நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

விசாரணைக்கு பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.

பாசன வசதி மேம்படுத்தப்படவில்லை

இந்தநிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் பிறப்பித்தனர். அதில் கூறியிருப்பதாவது:–

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் பாசன வசதியை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. தாமிரபரணியை ஒட்டி 8 அணைகளும், 283 கிலோ மீட்டர் நீளத்துக்கு 11 கால்வாய்களும் செல்கின்றன. இந்த பாசன அமைப்புகள் அனைத்தும் மன்னர்கள் ஆட்சி செய்த போதும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போதும் ஏற்படுத்தப்பட்டவை. தாமிரபரணி ஆற்றில் இருந்து உபரி நீர் கடலில் கலப்பதை தடுத்து, உபரி நீர் முழுவதையும் நீர் நிலைகளுக்கு நேரடியாக செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுவும் வருத்தம் தருகிறது.

பொதுநல நோக்கம் இல்லை

இந்த வழக்கை தொடர்ந்த பிரபாகர், சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனத்தில் வக்கீலாக 3 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். அவர் நியாயமாக நடந்து கொள்ளாததால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த குளிர்பான நிறுவனத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். குளிர்பான நிறுவனத்துக்கும் தனக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினையை தீர்க்க இங்கு பொதுநல மனுவை தாக்கல் செய்து உள்ளார் என குளிர்பான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் இருந்து மனுதாரர் சுயநலத்துக்காக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது தெளிவாகிறது. தனிப்பட்ட நலனுக்காக பொதுநல வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது. எனவே அவரது மனு உள்பட 2 மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.


Next Story