சீமைக்கருவேல மரங்களை குறைந்த விலைக்கு டெண்டர் விட்டதாக புகார் அதிகாரி பரிசீலிக்க, ஐகோர்ட்டு உத்தரவு
சீமைக்கருவேல மரங்களை குறைந்த விலைக்கு டெண்டர் விட்டதாக கூறப்பட்டுள்ள புகார் மனுவை அதிகாரி ஒரு வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும்
மதுரை,
கருவேல மரங்கள்திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா புத்தாநத்தம் பகுதியை சேர்ந்தவர் சாஜ்முகமது. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
ராமநாதபுரம் மாவட்டம் வளநாட்டில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டுவதற்கு கோவிலின் நிர்வாக அதிகாரி 10.11.2016 அன்று டெண்டர் அறிவிப்பு வெளியிட்டார்.
அந்த டெண்டர் அறிவிப்பில் எந்தெந்த சர்வே நம்பரில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டுவதற்கு டெண்டர் விடப்படுகிறது என்று தெரிவிக்கவில்லை. இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரியிடம் விவரம் கேட்ட போது, 3 சர்வே எண்களில் உள்ள கருவேல மரங்களை மட்டுமே வெட்டுவதற்கு டெண்டர் விடப்பட உள்ளதாக தெரிவித்தார்.
லாபம் அடையும் நோக்கம்இதனால் நான் டெண்டர் எடுக்க விண்ணப்பம் அளிக்கவில்லை. இந்தநிலையில் சீமைக்கருவேல மரங்களை வெட்டுவதற்கு 21 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த கருப்பணன் என்பவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அவருக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதி கடிதத்தில் 15 சர்வே எண்களை குறிப்பிட்டு 141 ஏக்கர் பரப்பளவில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அனுமதி கடிதத்தில் கூறப்பட்டுள்ள சர்வே எண்கள் பற்றி டெண்டர் அறிவிப்பில் தெரிவிக்கவில்லை. 141 ஏக்கரில் உள்ள சீமைக்கருவேல மரங்களின் மதிப்பு 45 லட்சம் ரூபாய் ஆகும். சட்டவிரோதமாக லாபம் அடையும் நோக்கத்தில் டெண்டர் அறிவிப்பில் எந்தெந்த சர்வே எண்களில் உள்ள கருவேல மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது என்று தெரிவிக்காமல் மறைத்து உள்ளனர்.
ரத்து செய்ய வேண்டும்கருவேல மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்துள்ள சர்வே எண்கள் குறித்த விவரங்களை டெண்டர் அறிவிப்பில் தெரிவித்து இருந்தால் 45 லட்சம் ரூபாய்க்கு கருவேல மரங்கள் ஏலம் போயிருக்கும்.
எனவே 10.11.2016 அன்று வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பையும், குறைந்த விலைக்கு கருவேல மரங்களை வெட்டுவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும். முறையாக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு கருவேல மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
பரிசீலிக்க வேண்டும்இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் புகார் மனுவை இந்து அறநிலையத்துறை ஆணையர் ஒரு வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.