கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு


கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
x
தினத்தந்தி 3 March 2017 4:00 AM IST (Updated: 2 March 2017 11:39 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி,

தனியார் நிறுவன ஊழியர்

சின்னசேலம் காந்தி நகரை சேர்ந்தவர் பெருமாள் மகன் திருமால் குமார்(வயது 47). தியாகதுருகத்தில் உள்ள சிம்கார்டு மொத்த விற்பனை செய்யும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் சின்னசேலத்தில் இருந்து தியாகதுருகம் புறப்பட்டார். கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பஸ் நிறுத்தம் அருகே சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், திருமால்குமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பலி

இந்த விபத்தில் திருமால்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான திருமால்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவருடைய மனைவி ரம்யா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story