பிளஸ்–2 தேர்வு தொடங்கியது: 41,144 மாணவ, மாணவிகள் எழுதினர் ஆள்மாறாட்டம் செய்தால் நிரந்தர தடை விதிக்க நடவடிக்கை
சேலம் மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வை 41 ஆயிரத்து 144 மாணவ, மாணவிகள் எழுதினர்.
சேலம்
41,144 பேர் தேர்வு எழுதினர்தமிழகத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் அரசு, சுயநிதி, மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் என 229 பள்ளிகளில் இருந்து 20,220 மாணவர்கள், 21,245 மாணவிகள் என மொத்தம் 41,465 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.
நேற்று நடந்த தமிழ் முதல்தாள் தேர்வினை 20,078 மாணவர்கள், 21,066 மாணவிகள் என மொத்தம் 41,144 பேர் எழுதினர். 142 மாணவர்கள், 179 மாணவிகள் உள்பட 321 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்விற்காக மாவட்டம் முழுவதும் 102 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஆசிரியர்கள் அறிவுரைதேர்வையொட்டி மாணவ, மாணவிகள் பலர் காலை 8 மணி முதலே அந்தந்த தேர்வு மையத்திற்கு வரத்தொடங்கினர். முன்னதாக அவர்களில் பலர் பெற்றோரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். மேலும் பல மாணவ, மாணவிகள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்வதை பார்க்க முடிந்தது.
ஒரு சில பள்ளிகளில் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் வரிசையாக நின்று அதிக மதிப்பெண் எடுக்க வேண்டி இறைவனை பிரார்த்தனை செய்தனர். சில பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு தேர்வு குறித்து சில அறிவுரைகள் வழங்கினர். பிளஸ்–2 தேர்வு தொடங்குவதையொட்டி முன்னதாக சேலம் குமாரசாமிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி உள்பட 16 இடங்களில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் அந்தந்த தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
முதன்மை கல்வி அதிகாரி ஆய்வுதேர்வுகளில் முறைகேடுகள் ஏதேனும் நடைபெறாமல் தடுக்க 220 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு தேர்வு நடைபெறும் மையங்களுக்கு அவ்வப்போது சென்று கண்காணித்தனர். இதுதவிர, தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு மையங்களின் நுழைவு வாசலில் ‘இது தடை செய்யப்பட்ட பகுதி‘ என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவிகள் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 கைதிகள் சென்னை புழல் சிறையில் பிளஸ்–2 தேர்வு எழுதினர்.
நிரந்தர தடைசேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் தேர்வு எழுதுவதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என நம்புகிறேன். மாணவர்கள் சோதனைக்கு பிறகே தேர்வு அறைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். யாராவது காப்பி அடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த தேர்வை அவர்களால் எழுத முடியாது. மற்ற தேர்வை அவர்கள் எழுதலாம்.
ஆள்மாறாட்டம் செய்து யாராவது தேர்வு எழுதினால் அவர்கள் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் 200–200–க்கு மதிப்பெண் வாங்க வேண்டும் என்று நினைத்து மாணவ, மாணவிகள் சிலர் ஒரு சில கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றால் அனைத்து விடைகளையும் கோடிட்டு அடித்து விடுகின்றனர். இவ்வாறு செய்தாலும் அவர்கள் 2 பருவத்தேர்வுகள் எழுத முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.